தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை


தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை
x
தினத்தந்தி 2 Oct 2023 12:45 AM IST (Updated: 2 Oct 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை, தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

நீலகிரி

தேவர்சோலை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானை, தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

காட்டு யானை

கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட மச்சிக்கொல்லி, பேபி நகர், மட்டம் பகுதி கிராமங்கள் முதுமலை வனப்பகுதி எல்லையில் உள்ளது. கடந்த சில மாதங்களாக காட்டு யானைகள் அடிக்கடி ஊருக்குள் வருகின்றன. இதில் ஒரு காட்டு யானை தினமும் வந்து பயிர்கள், வாகனங்களை சேதப்படுத்தி வருகிறது.

வனத்துறையினர் கண்காணிப்பு பணி மேற்கொண்டு காட்டு யானைகளை விரட்டினாலும் தொடர்ந்து ஊருக்குள் வருகிறது. இந்தநிலையில் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்கள் பலர் மாற்றிடம் வழங்கும் திட்டத்தின் கீழ் மச்சிக்கொல்லி பகுதியில் மறுகுடியமர்த்தப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு அப்பகுதியில் காட்டு யானை புகுந்து ஆதிவாசி மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது.

தொட்டிகளை உடைத்தது

அப்போது மீனாட்சி என்பவரது வீட்டின் முன்பு வைத்திருந்த 2 பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகளை உடைத்தது. இருப்பினும், இரவு நேரம் என்பதால் ஆதிவாசி மக்களால் வெளியே வர முடியவில்லை. தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த ராஜன், ஷாஜி, ஜோஸ், மற்றொரு ஜோஸ் ஆகியோரின் வாழைகள், தென்னை மரங்களை சேதப்படுத்தியது.

பின்னர் அதிகாலையில் காட்டு யானை அங்கிருந்து சென்றது. அதன் பின்னரே ஆதிவாசி மக்கள் மற்றும் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, காட்டு யானைகளின் தொடர் அட்டகாசத்தால் மாலையில் தொடங்கி இரவு மற்றும் காலை நேரம் வரை வீடுகளுக்குள் அச்சத்துடன் முடங்கி இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வனப்பகுதி எல்லையில் அகழி தோண்டும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றனர்.


Next Story