நாகையில் ஒரு 'அலையாத்திக்காடு'


நாகையில் ஒரு அலையாத்திக்காடு
x

நாகையில் உள்ள அலையாத்திக்காட்டை படகு சவாரி வசதியுடன் சுற்றுலா தலமாக்கப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகையில் உள்ள அலையாத்திக்காட்டை படகு சவாரி வசதியுடன் சுற்றுலா தலமாக்கப்படுமா? என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அலையாத்தி காடுகள்

அலையாத்தி காடுகள் என்றாலே தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் ஆகிய பகுதிகள்தான் நினைவுக்கு வரும். அலையாத்தி காடுகள் கடலின் முகத்துவாரங்களில் அமைந்திருப்பவை. ஒரு சில பகுதிகளில் மட்டுமே வளரக்கூடிய அரிய வகை மரங்களின் தொகுப்பே அலையாத்தி காடுகள்.

கடலில் இருந்து வரும் அலையின் சீற்றத்தை தடுத்து ஆற்றுப்படுத்தும் தன்மை இந்த பகுதியில் உள்ள மரங்களுக்கு இருப்பதால் இவை, 'அலை + ஆற்று + மரங்கள் = அலையாத்தி மரங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன.

புயல்காற்றை தடுத்து நிறுத்தும்

இவை அதிக வெப்பம் அல்லது அதிக மழை இருக்கும் இடங்களில் மட்டுமே வளரும். மேலும் கடலோர முகத்துவாரப் பகுதிகள், உப்பங்கழிகள் ஆகியவை அலையாத்தி மரங்கள் வளர்வதற்கு ஏற்ற இடமாகும் என ஆய்வுகள் சொல்கின்றன. அலையாத்தி காடுகள் உள்ள பகுதிதான் அரிய வகை விலங்குகள், பறவைகள், பூச்சிகள், மீன்கள் வாழ்வதற்கு அடிப்படை ஆதாரமாக விளங்குகின்றன.

2004-ம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமிக்கு பின்னர்தான் அலையாத்தி காடுகளை பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. அலையாத்தி காடுகளில் உள்ள மரங்களின் வேர்கள், மணலை இறுகச்செய்து, கடல் சீற்றம் ஏற்படும்போது மண் அரிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. 80 முதல் 100 மைல் வேகத்தில் வருகிற புயல் காற்றைக்கூட தடுத்து நிறுத்தும் வலிமை அலையாத்தி காடுகளுக்கு உண்டு.

நாகையில் அலையாத்திக்காடு

தமிழகத்தில் வெளியில் தெரியாத பல இடங்களில் குறுங்காடுகளாக அலையாத்தி காடுகள் இன்றளவும் உள்ளன. அந்த வகையில் நாகை அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுக கடுவையாற்றின் வடக்குப்புறத்தில் குறுங்காடாக அலையாத்திக்காடு காணப்படுகிறது. கரை புரண்டு ஓடும் கடுவையாற்றின் ஓரத்தில் பச்சை பசேலென காட்சியளிக்கும் இந்த அலையாத்தி காட்டில் அரிய வகை பறவைகள், பூச்சி மற்றும் மீன் இனங்கள் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

சீசன் காலத்தில் கோடியக்கரை சரணாலயத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகளை போன்று இந்த அலையாத்தி காட்டிலும் ஏராளமான பறவைகள் வந்து முட்டையிட்டு, குஞ்சு பொரித்து செல்கின்றன.

கண்களுக்கு விருந்தாக...

அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து பார்த்தால் சிறிய காடு போல தோன்றும். ஆனால் உள்ளே படகில் சென்று பார்த்தால் மிகவும் அழகாக காட்சி அளிக்கும். உள்ளே செல்பவர்களுக்கு புது அனுபவமாக இருக்கும். அங்குள்ள பறவைகள், அவை கட்டிய கூடுகள், பலவகை மீன்கள், நண்டுகள் உள்ளிட்டவைகள் பார்ப்பவர்கள் கண்களுக்கு விருந்தளிக்கும். ஆனால் இன்றளவும் இப்படிப்பட்ட அலையாத்திக்காடு இருப்பது வெளி உலகுக்கு தெரியவில்லை.

சுற்றுலா தலங்கள்

வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இருப்பதால் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாகை மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பு, நீண்ட நெடிய கடற்கரையை கொண்ட நாகையில் படகு சவாரி செய்ய முடியவில்லையே என்பதாகும். இதனை பூர்த்தி செய்யும் விதமாக, அக்கரைப்பேட்டையில் அமைந்துள்ள இந்த அலையாத்திக்காட்டை மையப்படுத்தி படகு சவாரி செய்யும் வசதியுடன் கூடிய சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்.

வேளாங்கண்ணி, நாகூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் நாகை அலையாத்தி காடுகளை படகு சவாரி மூலம் பார்க்க ஆர்வமாக வருவார்கள். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கும். இதன் மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கும் என நாகை பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கடல்வாழ் உயிரினங்கள்

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் நாட்டார் கூறுகையில், கடுவையாற்றில் அக்கரைப்பேட்டை வடக்கு பொய்கைநல்லூர், கருவேலங்கடை உள்ளிட்ட பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அலையாத்தி காடு பரந்து விரிந்து இருந்தன.

இது ஒரு உவர் நீர் மேய்ச்சல் காடு என்றும், சின்ன முள்ளி காடு, சம்பு வாய்க்கால் என்றும் அழைக்கப்பட்டது. இதில் எண்ணற்ற கடல்வாழ் உயிரினங்களும் வாழ்ந்து வந்தன. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பர்மாவிலிருந்து வந்த அகதிகள் இந்த அலையாத்தி காட்டில் இருந்த மரங்களை வெட்டி விறகுக்கும், தட்டி முடிவதற்கும் பயன்படுத்தினர். இதனால் இந்த அலையாத்தி காட்டில் இருந்த மரங்கள் குறைந்து விட்டன.

கண்காணிக்க வேண்டும்

அலையாத்தி காடுகளை உருவாக்க மீனவ கிராமத்தினர் முன்வந்து 1992-ம் ஆண்டு அப்போது உதவி கலெக்டராக இருந்த இறையன்புவிடம் தெரிவித்தோம். இதையடுத்து அலையாத்தி விதைக் கன்றுகளை அவர் உதவியுடன் நட்டு வைத்தோம். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்து தற்போது 100 ஏக்கருக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து பச்சைப் பசேலென செழித்து காணப்படுகிறது.

எண்ணற்ற கடல் வாழ் உயிரினங்களும், சீசன் காலத்தில் ஏராளமான பறவை இனங்களும் நாகை அலையாத்தி காட்டுக்கு வந்து தங்கி இனவிருத்தி செய்து வருகின்றன. இந்த அலையாத்தி காட்டை அரசு பாதுகாக்க வனத்துறையின் கீழ் கொண்டு வந்து கண்காணிக்க வேண்டும் என்றார்.

பறவைகளின் ஒலி

இதுகுறித்து கீச்சாங்குப்பத்தை சேர்ந்த பரசுராமன் கூறுகையில், நாகையில் பெரும்பாலானோருக்கு இப்படி ஒரு அருமையான அலையாத்திக் காடு இருப்பது தெரியாது. கொக்கு, நாரை, செங்கால் நாரை, முள்ளான், குட்டி காக்கா, கரண்டிவாயன் உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்களும் வெளிநாட்டில் இருந்து இங்கு வந்து கூடு கட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து, பின்னர் சொந்த நாட்டிற்கு சென்று விடுகின்றன.

பறவை இனங்கள் இங்கு உள்ளதால் கீச்சாங்குப்பம், சேவாபாரதி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பறவைகள் எழுப்பும் ஒலி இனிமையாய் கேட்கும். இதனைக்கேட்டுத்தான் பெரும்பாலானோர் தூக்கத்தில் இருந்து எழுகின்றனர்.

கோடியக்கரை, தலைஞாயிறு, வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் அலையாத்திக்காடுகள் இருந்தாலும் நாகையில் உள்ள அலையாத்தி காட்டுக்கு தனி சிறப்பு உண்டு. ஏனென்றால் மாவட்டத்தின் தலைமை இடத்தில் இருக்கும் இந்த அலையாத்தி காட்டை பராமரித்து சுற்றுலாத்தலமாக மாற்றினால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்றார்.


Next Story