விழிபிதுங்கி நிற்கும் விலைவாசி உயர்வு


விழிபிதுங்கி நிற்கும் விலைவாசி உயர்வு
x

விழிபிதுங்கி நிற்கும் விலைவாசி உயர்வு குறித்து பெண்கள், வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கரூர்

மளிகை பொருட்களின் மீதான விலையேற்றம் இல்லத்தரசிகளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகும். அதிலும் பட்ஜெட் போட்டு வாழ்க்கையை நடத்தும் குடும்பங்களுக்கு இது கலக்கத்தையே உண்டாக்கி விடும். விளைவு, சமையலில் மளிகை பொருட்களின் அளவு குறையும். அப்படி ஒரு நிலை தான் தற்போது ஏற்பட்டிருக்கிறது.

மளிகை பொருட்கள் விலை உயர்வு

ஏற்கனவே காய்கறி-பழங்களின் விலை உயர்வால் நொந்துபோன மக்களுக்கு, மளிகை பொருட்களின் திடீர் விலையேற்றம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தில் விளைச்சல் இருந்தாலும் பொதுமக்களின் தேவை கருதி ஆந்திரா, கேரளா, மராட்டியம் போன்ற அண்டை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் மளிகை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்தநிலையில் அண்டை மாநிலங்களில் விளைச்சல் குறைந்திருப்பதின் எதிரொலியாக தமிழகத்துக்கு வரும் மளிகை பொருட்களின் வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மளிகை பொருட்களின் விலை 20 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்திருக்கிறது.

துவரம் பருப்பு

குறிப்பாக துவரம் பருப்பு விலை கடந்த வாரத்தில் கிலோ ரூ.120 அளவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.150 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்படுகிறது. துவரம் பருப்பை பொறுத்தவரையில் மராட்டியத்தில் இருந்தே பெருமளவு சரக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால் அங்கிருந்து உக்ரைன் நாட்டின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெருமளவு அனுப்பி வைக்கப்பட்டு வருவதால், இதர மாநிலங்களுக்கு அனுப்பப்படும் சரக்கின் அளவு குறைந்திருக்கிறது. இதுவே துவரம் பருப்பின் விலையேற்றத்துக்கு காரணம். வரும் நாட்களில் துவரம் பருப்பின் விலை இன்னும் உயரவே வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல் மிளகாய் தூள், சீரகம், சோம்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. போக்குவரத்து, வண்டி -ஆட்கள் கூலி போன்ற காரணங்களால் வெளிச்சந்தையில் மளிகை பொருட்களின் விலை 10 முதல் 15 சதவீதம் வரை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.

விலை பட்டியல்

கரூர் காமராஜ் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலை நிலவரம் வருமாறு:- (கிலோவில்/ மொத்த விலையில்):- துவரம் பருப்பு- ரூ.150 முதல் ரூ.160 வரை, பாசிபருப்பு- ரூ.110 முதல் ரூ.120 வரை, உளுந்தம் பருப்பு- ரூ.130 முதல் ரூ.140 வரை, கடலை பருப்பு- ரூ.80 முதல் ரூ.90 வரை, பொட்டுக்கடலை- ரூ.80 முதல் ரூ.90 வரை, மிளகாய் தூள் ரூ.400 முதல் ரூ.420 வரை, மஞ்சள் தூள்- ரூ.130 முதல் ரூ.160 வரை, சீரகம்- ரூ.750, சோம்பு- ரூ.500, கடுகு- ரூ.160, மிளகு- ரூ.600 முதல் ரூ.700 வரை, வெந்தயம்- ரூ.160, கோதுமை மாவு ரூ.65, மைதா ரூ.50 முதல் ரூ.60, சர்க்கரை ரூ.42, வெல்லம்- ரூ.50 முதல் ரூ.55 வரை, புளி- ரூ.100 முதல் ரூ.160 வரை, முந்திரி- ரூ.600 முதல் ரூ.700 வரை, திராட்சை- ரூ.350 முதல் ரூ.400 வரை, சன் பிளவர் ஆயில்- ரூ.110, நல்லெண்ணெய்- ரூ.320, ரூ.340, தேங்காய் எண்ணெய்- ரூ.200, ரூ.240, டால்டா ரூ.160, ஏலக்காய்- ரூ.1,800 முதல் ரூ.2,000, வரமிளகாய்- ரூ.220 முதல் ரூ.300 வரை, பச்சை பட்டாணி- ரூ.90 முதல் ரூ.100 வரை, வெள்ளை பட்டாணி- ரூ.90 முதல் ரூ.100 வரை, வெள்ளை சுண்டல் பெரியது ரூ.160, சிறியது ரூ.120, கருப்பு சுண்டல் ரூ.100, பொன்னி அரிசி ரூ.55 முதல் ரூ.65 வரை, பாசுமதி ரூ.130, பிரியாணி அரிசி- ரூ.75 முதல் ரூ.110 வரை, இட்லி அரிசி- ரூ.45முதல் ரூ.50 வரை.

காய்கறிகள் விலை

கரூர் தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் காய்கறிகள் விலை விவரம் வருமாறு (கிலோவில்):- தக்காளி ரூ.110, ரூ.120, பெரிய வெங்காயம் ரூ.30, உருளைக்கிழங்கு ரூ.35, கத்தரிக்காய் ரூ.50, வெண்டைக்காய் ரூ.50, பாகற்காய் ரூ.60, முள்ளங்கி ரூ.50, பட்டை அவரை ரூ.100, ரூ.120, கொத்தவரங்காய் ரூ.60, கோழி அவரை ரூ.180, பீன்ஸ் ரூ.160, புடலங்காய் ரூ.60, கேரட் ரூ.100, பீட்ரூட் ரூ.80, காளிபிளவர் ரூ.40, ரூ.50, பச்சை மிளகாய் ரூ.160, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.60, மல்லி 1 கட்டு ரூ.100 (பெரியது), முட்டைகோஸ் ரூ.40, இஞ்சி ரூ.360, சின்ன வெங்காயம், 120, பூசணிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60.

விழிபிதுங்கி நிற்கும் விலைவாசி உயர்வு குறித்து கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:-

வரத்து குறைவு

கரூர் தினசரி மார்க்கெட் வியாபாரி பாலசுப்பிரமணி:- தக்காளி மற்றும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் அவற்றின் விலை உயர்ந்துள்ளது. தக்காளி கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.30-க்கு விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.110 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது. தக்காளியின் வரத்து மிகவும் குறைந்துள்ளதே இதற்கு காரணம். இதேபோல் மற்ற காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காய்கறிகளின் வரத்தும் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. வரத்து குறைவின் காரணமாக காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்கறிகள் விலை குறைவாகத்தான் இருந்தது. வரத்து இல்லாததால் 10 முதல் 30 சதவீதம் வரை காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.

சட்னி வகைகள்...

தோகைமலை அருகே உள்ள வடசேரியை சேர்ந்த திவ்யா:-

தோகைமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களின் விலை கடந்த 10 நாட்களாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.30-க்கு விற்பனையான தக்காளி தற்போது கிலோ ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையாகிறது. இதனால் குழம்பு மற்றும் சட்னி வகைகளுக்கு தக்காளியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் அரிசி, சமையல் எண்ணெய், மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. தற்போதுள்ள சூழலில் விலைவாசி உயர்வு குறித்து யாரும் அதிகம் கவலைப்படுவதாக தெரியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லாபமடையும் வியாபாரிகள்

குளித்தலை அருகே உள்ள சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த சரஸ்வதி:- விலைவாசி உயர்வு என்பது நடுத்தர, ஏழை, எளிய மக்களை மிகவும் பாதித்துள்ளது. காய்கறிகள் மட்டுமல்லாது அனைத்து பொருட்களின் விலையும் தற்போது உயர்ந்து வருகிறது. காய்கறிகள் விளைச்சல் குறைவான நேரத்தில் மட்டுமே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. வருடத்தில் காய்கறி விலை உயர்வு என்பது ஒரு சில மாதங்கள் மட்டுமே. அப்படியே விலை உயர்ந்தாலும் அந்த காய்கறிகளை விளைவித்த விவசாயிகளுக்கு அந்த தொகை சென்று சேருவதில்லை. அந்த காய்கறிகளை வாங்கி கைமாற்றி விற்கும் வியாபாரிகளே லாபமடைகின்றனர். காய்கறிகள் தவிர பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் ஆண்டுக்கு 4 முறையேனும் உயர்ந்து விடுகிறது. ஆனால் அதை முன்னெடுத்து யாரும் பேசுவதில்லை. பொதுமக்கள் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் போது அதை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

கொரோனா காலத்தில்...

தளவாய்பாளையத்தை சேர்ந்த மளிகை கடை வியாபாரி சண்முகராஜ்:- கொரோனா காலத்திற்கு முன்பு வியாபாரம் நன்றாக நடந்து வந்தது. 2 வேலையாட்கள் பணிபுரிந்தனர். தற்போது நான் மட்டும் உள்ளேன். எப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததோ அன்று முதல் கடுகு முதல் அனைத்து மளிகை பொருட்களும் விலை உயர்ந்து விட்டது. மேலும் இதன் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. சமையலுக்கு தேவையான துவரம் பருப்பு கிலோ ரூ.140-க்கு விற்றது. தற்போது ரூ.160-க்கும், ரூ.535-க்கு விற்ற மிளகு ரூ.600-க்கும், ரூ.70-க்கு விற்ற புளி ரூ.100-க்கும், ரூ.85-க்கு விற்ற கடுகு ரூ.90 முதல் ரூ.150-க்கும், ரூ.60-க்கு விற்ற பூண்டு ரூ.120-க்கும் விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி கிலோ ரூ.10-க்கு விற்றது. தற்போது கிலோ ரூ.120-க்கு விற்பனையாகிறது. ஆனால் தனி நபரின் வருமானம் உயரவில்லை. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே விலைவாசி உயர்வை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சொத்துவரி, மின் கட்டணம் உயர்வு

வெள்ளியணையை சேர்ந்த கமலவேணி:- அரிசி, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், மசாலா பொருட்கள், வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் என அனைத்து பொருட்களும் தற்போது விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு சிறிது காலத்திற்கு நிலையாக இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும் என்றால் அது நடப்பதில்லை. மீண்டும் விலை ஏறத்தான் செய்கிறது. காய்கறிகளின் விலை வேண்டுமானால் வரத்து அதிகரிக்கும் போது குறையுமே தவிர, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை குறைவதில்லை. ஏற்கனவே சொத்து வரி உயர்வால் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி விட்டனர். மேலும் சமையல் சிலிண்டர் விலையும், மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இப்படி அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் தினக்கூலிக்கு செல்வோர், குறைந்த அளவு மாத சம்பளம் பெறுவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவர்களின் தினக்கூலியோ, மாத சம்பளமோ உயரவில்லை. எனவே அரசு அத்தியாவசிய பொருட்களின் மீதான விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பதுக்கி வைத்து விற்பனை

வேலாயுதம்பாளையம் அருகே பாலத்துறை பகுதியை சேர்ந்த பேபி:- கடந்த 2 மாதங்களாக துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு, மல்லி, சீரகம், சோம்பு, மிளகாய் உள்ளிட்ட பல்வேறு மளிகை பொருட்களும், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெய் வகைகளும் தொடர்ந்து விலை ஏறி வருகிறது. அதேபோல் தற்போது காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்த்து வருகிறது. ஒரு பெண் கூலி வேலைக்கு சென்றால் அவருக்கு தினக்கூலியாக ரூ.200 மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை வைத்து அவர் எப்படி மளிகை பொருட்களை வாங்கி தனது குழந்தைகளுக்கு சமைத்து போடுவார்?.

மத்திய, மாநில அரசுகள் விலை உயர்வை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மொத்த வியாபாரிகள் பருப்பு வகைகளை பதுக்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். தற்போது அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு ஏறிவிட்டது. ஒவ்வொரு பொருளுக்கும் கிலோவுக்கு ரூ.40 வரை விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை மற்றும் நடுத்தர மக்களே.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story