காத்திருப்பு போராட்டம்


காத்திருப்பு போராட்டம்
x

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்

பாபநாசம் தாலுகா ராஜகிரி ஊராட்சி பெரியார் தெரு நத்தம் புறம்போக்கில் அந்த பகுதியில் நிலமற்ற நிலையில் குடியிருந்து வரும் ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தியும், பெரியார் தெரு சுடுகாட்டிற்கு மயான கொட்டகை அமைத்து தர வலியுறுத்தியும், தொகுப்பு வீடுகள் கட்டித்தரக்கோரியும், பாபநாசம் பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பாபநாசம் தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. அப்போது கட்சியினர் பாத்திரங்களில் சமையல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு ராஜகிரி கிளைச்செயலாளர் தங்கராசு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில்

மாவட்ட குழு உறுப்பினர் காதர் உசேன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் முரளிதரன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாதர்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, வருவாய் ஆய்வாளர் வரதராஜன், கிராம நிர்வாக அலுவலர் நீலகண்டன் ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நத்தம் புறம்போக்கில் நிலமற்ற ஏழைகளுக்கு பட்டா வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story