டீசல் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து
நெல்லை தச்சநல்லூரில் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நெல்லை தச்சநல்லூரில் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
டீசல் டேங்கர் லாரி
நெல்லை தச்சநல்லூரில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் டீசல் சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு இருந்து நேற்று மதியம் சுமார் 6 ஆயிரம் லிட்டர் டீசலை நிரப்பிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி கங்கைகொண்டான் சிப்காட்டுக்கு புறப்பட்டது. லாரியை சிவபெருமாள் (வயது 56) என்பவர் ஓட்டினார். சேமிப்பு கிடங்கில் இருந்து லாரி வெளியே வந்து ஸ்ரீபுரம் சாலையில் சென்றது. அப்போது எதிரே ஒரு வாகனம் வந்ததால் டிரைவர் லாரியை பின்புறமாக எடுத்துள்ளார். அப்போது லாரியின் பின்சக்கரம் சாலையோர பள்ளத்தில் இறங்கியதால் லாரி திடீரென சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதனால் லாரியின் டேங்கரில் இருந்து டீசல் கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட தொடங்கியது.
தீயணைப்பு வீரர்கள்
இதுகுறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மாவட்ட அலுவலர் கணேசன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலர் கார்த்திகேயன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நுரை கலவை சிறப்பு தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்துக்கு சென்றனர். தொடர்ந்து பேட்டையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வந்தது. பெரிய கிரேன் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி அந்த லாரியை அங்கிருந்து மீட்டனர். பின்னர் அந்த லாரி பெட்ரோல் சேமிப்பு கிடங்குக்கே கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.