பசுமாட்டை அடித்துக்கொன்ற புலி
எமரால்டு பகுதியில் பசுமாட்டை புலி அடித்துக்கொன்ற சம்பவம், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சூர்
எமரால்டு பகுதியில் பசுமாட்டை புலி அடித்துக்கொன்ற சம்பவம், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பசுமாட்டை கொன்ற புலி
நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர், ஓவேலி, மஞ்சூர் உள்ளிட்ட பகுதிகள் 65 சதவீதத்திற்கும் அதிகமாக வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இதற்கிடையே தீவன தட்டுப்பாடு, வனப்பகுதியில் ஆக்கிரமிப்பு, வழித்தடங்கள் அழிப்பு உள்பட பல்வேறு காரணங்களால் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் அதிகளவில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் கரடி, சிறுத்தை நடமாட்டமும், கூடலூர் பகுதியில் காட்டு யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது எமரால்டு பகுதியில் புலி நடமாட்டம் அதிகரித்து உள்ளது. அங்கு மின்வாரிய அலுவலக பகுதியில் புட்டன் என்பவரின் வீடு அருகில் ராஜன் கார்த்தி என்பவருக்கு சொந்தமான பசுமாட்டை புலி அடித்து கொன்றது. ஊருக்குள் வந்து பசுமாட்டை புலி அடித்து கொன்று இருப்பதால், அந்த பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்
இதுவரை 23 கால்நடைகள் சாவு
இதுகுறித்து எமரால்டு பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
குடியிருப்பை ஒட்டி உள்ள வனப்பகுதியில் வேட்டையாடப்பட்ட பசு மாட்டின் உடல் கிடந்ததை பார்த்து இந்த பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஏனென்றால் இந்த புலி மீண்டும் கால்நடைகளை தேடி இந்த பகுதிக்கு வரலாம். அப்போது மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இந்த புலி 23 கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. எனவே இதை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதேபோன்று கடந்த வாரம் 6-ந் தேதி எமரால்டு பஜார் பகுதியில் கரடி ஒன்று சுற்றி திரிந்ததால், அதிகாலை நேரத்தில் வேலைக்கு வந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.