மாட்டை அடித்துக்கொன்ற புலி


மாட்டை அடித்துக்கொன்ற புலி
x
தினத்தந்தி 13 Oct 2023 1:00 AM IST (Updated: 13 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அருகே மாட்டை புலி அடித்துக்கொன்றது. அங்கு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

நீலகிரி

ஊட்டி அருகே மாட்டை புலி அடித்துக்கொன்றது. அங்கு கேமரா பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கால்நடைகள்

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதிகளை கொண்டு உள்ளது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இதற்கிடையில் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் ஊட்டி தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட ரிஸ்கார்னர் பிரிவு குருத்துக்குளி பகுதியில் விவசாயிகள் சிலர் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு இருந்தனர். இதில் சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான மாடு மட்டும் வீடு திரும்பவில்லை.

புலி தாக்கி சாவு

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அக்கம்பக்கத்தில் தேடினார். அப்போது அதே பகுதியில் புலி தாக்கி மாடு இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் ஊட்டி தெற்கு வனசரகர் கிருஷ்ணகுமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாட்டின் உடலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் கால்நடை டாக்டர் சிவசங்கர் வரவழைக்கப்பட்டு மாட்டின் உடலை பிரதே பரிசோதனை செய்து வனப்பகுதியில் குழி தோண்டி புதைத்தனர்.

கேமரா பொருத்தம்

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் இதுவரை 10-க்கும் மேற்பட்ட மாடுகள் புலி தாக்கி இறந்துள்ளது. மாடு கிடைக்காவிட்டால் மனிதர்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

வனத்துறையினர் கூறுகையில், புலி நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளோம். மாட்டின் உரிமையாளருக்கு நிவாரணம் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.


Next Story