கோவில்களில் அம்மன் தாலிகளை திருடிய கொள்ளையன் சிக்கினான். உருக்கி வைத்த வெள்ளிக்கட்டி, நகைகள் மீட்பு


கோவில்களில் அம்மன் தாலிகளை திருடிய கொள்ளையன் சிக்கினான். உருக்கி வைத்த வெள்ளிக்கட்டி, நகைகள் மீட்பு
x

பர்கூர் போலீசாரால் திருப்பதியில் கைது செய்யப்பட்ட துணி வியாபாரியிடம் வேலூர் கோவில்களில் திருடிய அம்மன் தாலிகள் மீட்கப்பட்டன.

வேலூர்

கோவில்களில் திருட்டு

வேலூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கோவில்களில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து சாமி சிலைகளில் இருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு சம்பவம் நடந்து வந்தது. இது தொடர்பாக இரு மாவட்ட தனிப்படை போலீசாரும் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர் திருப்பதியில் இருப்பது தெரியவரவே கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் போலீசார் திருப்பதிக்கு சென்று அவரை பிடித்தனர்.

விசாரணையில் அவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்குகுண்டா பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரின் மகன் உமேஷ் (வயது 44) என்பதும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சாமிக்கு அணிவலிக்கப்படும் நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

அவரை போலீசார் கைது செய்து பர்கூருக்கு கொண்டு வந்து கிளை சிறையில் அடைத்தனர். கைதான உமேஷ் வேலூர் மாவட்ட கோவில்களிலும் கொள்ளையடித்தது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ரவி உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை பிரிவு போலீசார் உமேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர்.

நகை, வெள்ளி பறிமுதல்

விசாரணையில் வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில், சாத்துமதுரை முருகன் கோவில், பள்ளிகொண்டாவில் உள்ள நாகஈஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் பூட்டை உடைத்து தங்க நகை, வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்ததை உமேஷ் ஒப்புக்கெபாண்டார்.

அதைத் தொடர்ந்து அவர் பதுக்கி வைத்திருந்த 4½ கிலோ வெள்ளிக்கட்டிகள், 1½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

உமேஷ் சொந்த மாவட்டம் கன்னியாகுமரி. இவர் திருப்பதியில் துணி வியாபாரம் செய்து வந்தார். கொரோனா காலக்கட்டத்தில் அவருக்கு போதுமான வருமானம் இல்லை. எனவே அவர் பல்வேறு பகுதிகளுக்கு மோட்டார்சைக்கிளில் துணி வியாபாரம் செய்ய தொடங்கினார். அவரின் 2-வது மனைவியின் ஊர் வேலூர் அருகே அ.கட்டுப்புடி கிராமம் ஆகும். வேலூர் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மோட்டார்சைக்கிளில் துணிகளை விற்பனை செய்ய செல்வார். அப்போது ஒவ்வொரு கோவிலிலும் இளைப்பாறுவது போன்று படுத்துக்கொள்வார். கோவிலையும் நன்கு நோட்டமிடுவார்.

நோட்டமிட்டு கைவரிசை

பின்னர் இரவில் கோவில்களுக்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை உடைத்து கோவிலில் உள்ள நகை, வெள்ளி பொருட்களை திருடி செல்வார். இதை அவர் வாடிக்கையாக வைத்துள்ளார். திருடப்படும் வெள்ளி பொருட்களை உருக்கி கட்டியாக வைத்துள்ளார். திருடப்பட்ட பணம் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்துள்ளார்.

சத்துவாச்சாரியில் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதியும், பள்ளிகொண்டாவில் ஜூலை மாதம் 22-ந் தேதியும், சாத்து மதுரையில் நவம்பர் மாதம் 22-ந் தேதியும் கோவில்களை உடைத்து நகை பணத்தை திருடியுள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவர் 3 கோவில்களில் திருடிய 3½ பவுன் நகைகள் திருடப்பட்டது. கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் அவரை அடையாளம் கண்டு தேடி வந்தோம். இந்தநிலையில் அவரை பர்கூர் போலீசார் கைது செய்தனர். உமேஷ் 2 பவுனை விற்று செலவு செய்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளில் 7 சாமி தாலிகள் அடங்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story