தண்டையார்பேட்டையில் 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து; வீடுகளுக்கும் தீ பரவியதால் பரபரப்பு


தண்டையார்பேட்டையில் 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து; வீடுகளுக்கும் தீ பரவியதால் பரபரப்பு
x

தண்டையார்பேட்டையில் 2 குடோன்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அருகில் உள்ள வீடுகளுக்கும் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

சென்னை

குடோன்களில் தீ விபத்து

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 4-வது குறுக்கு தெருவில் வீடுகள் சூழ்ந்த பகுதியில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான பாலிதீன் பைகள் குடோன், ஜாகீர் என்பவருக்கு சொந்தமான துடைப்பம் குடோன் மற்றும் சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனிகள் இயங்கி வருகிறது. நேற்று மதியம் பாலிதீன் பைகள் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் இருந்து கரும்புகை வெளியேறிதால் அங்கு பணியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். அதற்குள் தீ மளமளவென பரவி, அருகில் இருந்த துடைப்பம் வைத்திருந்த குடோன், சில்வர் பாத்திரம் தயாரிக்கும் கம்பெனி மற்றும் அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. இதனால் அந்த குடோன், கம்பெனி, வீடுகளில் இருந்தவர்களும் அலறி அடித்து வெளியே ஓடிவந்தனர்.

2 மணி நேரம் போராட்டம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் வடசென்னை மாவட்ட தீயணைப்பு அதிகாரி லோகநாதன், மாவட்ட துணை அதிகாரி சூரிய பிரகாசம் ஆகியோர் தலைமையில் கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அதிகாரிகள் முனுசாமி, குமார், தெய்வ நாராயணன் உள்பட 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர்.

காரணம் என்ன?

எனினும் தீ விபத்தில் பாலிதீன் பைகள் மற்றும் துடைப்பம் குடோன்கள் இரண்டும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளுக்கு தீ பரவியதில் அங்கு இருந்த ஏ.சி. எந்திரம் தீயில் கருகியதுடன், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் எம்.எல்.ஏ. எபினேசர், தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன், வடசென்னை மாதவரம் கோட்டாட்சியர் ரங்கநாதன் மற்றும் தாசில்தார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story