மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்போன் பேசிய வாலிபர், கார் மோதி பலி
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்போன் பேசிய வாலிபர், கார் மோதி பலியானார்.
சாயர்புரம்:
தூத்துக்குடி அருகே மோட்டார் சைக்கிளில் அமர்ந்து செல்போன் பேசிய வாலிபர், கார் மோதியதில் பலியானார்.
செல்போனில் பேசியபோது...
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே கூட்டாம்புளி போடம்மாள்புரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பிரேம் சஞ்சய் (வயது 22.) பட்டதாரியான இவர் நேற்று முன்தினம் இரவில் பக்கத்து ஊரான இருவப்பபுரத்துக்கு மோட்டார் சைக்கிளில் நண்பர்களுடன் சென்றார்.
அங்குள்ள பெரும்படை சாஸ்தா கோவில் அருகில் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அதன் மீது அமர்ந்தவாறு பிரேம் சஞ்சய் செல்போனில் பேசி கொண்டிருந்தார்.
கார் மோதியது
அப்போது அந்த வழியாக ஆறுமுகமங்கலம் நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பிரேம் சஞ்சயை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய காரை சாலையோரம் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். அந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. கார் முழுவதும் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் எலும்புக்கூடானது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாயர்புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மேரி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கார் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது காருக்கு யாரேனும் தீ வைத்தார்களா? என்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.