செங்குன்றம் அருகே லாரியை ஏற்றியதில் படுகாயம் அடைந்த வாலிபரும் உயிரிழந்தார் - பலி எண்ணிக்கை 3 ஆனது
செங்குன்றம் அருகே லாரியை ஏற்றியதில் படுகாயம் அடைந்த வாலிபரும் உயிரிழந்தார். இதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 3 ஆக உயிரிழந்துள்ளது.
செங்குன்றத்தை அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் லாரிகளை நிறுத்தும் 'பார்க்கிங் யார்டு' உள்ளது. கடந்த புதன்கிழமை இரவு வடபெரும்பாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (வயது 36), குமரன்(34), நவீன்(36) ஆகியோர் அங்கு நிறுத்தி இருந்த லாரியின் பின்புறம் அமர்ந்து மது அருந்தினர். அப்போது இவர்களுக்கும், அந்த வடமாநில லாரியின் டிரைவர் கண்ணையாலால்(32), கிளீனர் கிரிஷ்குமார்(30) ஆகியோருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த டிரைவர் கண்ணையாலால், லாரியை பின்நோக்கி வேகமாக ஓட்டி வந்து 3 பேர் மீதும் ஏற்றினார். இதில் லாரி சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குமரன், கமலக்கண்ணன் இருவரும் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நவீன், சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக லாரி டிரைவர் கண்ணையாலால், கிளீனர் கிரிஷ்குமார் இருவரையும் செங்குன்றம் போலீசார் கைது செய்தனர்.
இந்தநிலையல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நவீனும், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆனது. இதையடுத்து இந்த வழக்கை போலீசார், 3 பேர் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனர்.