சாலை விபத்தை வேடிக்கை பார்த்த வாலிபர் கிரேன் மோதி பலி


சாலை விபத்தை வேடிக்கை பார்த்த வாலிபர் கிரேன் மோதி பலி
x

பனையூரில் சாலை விபத்தை வேடிக்கை பார்த்த வாலிபர், கிரேன் மோதி பலியானார். இதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை

நீலாங்கரை,

சென்னையை அடுத்த நீலாங்கரை அருகே பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் கியாஸ் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பனையூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது டிரைவர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் டிபன் கடை மீது மோதியதுடன், அருகில் இருந்த சுற்றுச்சுவரை இடித்தபடி நின்றது.

அப்போது பனையூர் ஜாகிர்உசேன் தெருவை சேர்ந்த ரஷீத் அகமது (வயது 23) என்பவர் அந்த வழியாக அதிகாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அவர் இந்த விபத்து நடந்த இடத்தில் நின்று கொண்டு விபத்து குறித்து அங்கிருந்தவர்களிடம் கேட்டறிந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்.

அதேநேரம் சென்னையில் இருந்து கோவளம் நோக்கிச் சென்ற கிரேன் டிரைவரும், இந்த விபத்தை வேடிக்கை பார்த்தபடி கிரேனை ஓட்டி வந்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கிரேன், சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதியதுடன், சாலையின் இடதுபுறம் மோட்டார்சைக்கிளில் நின்று கொண்டிருந்த ரசீத் அகமது மீது மோதியது.

இதில் ரசீத் அகமது நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது கிரேனின் சக்கரம் ஏறி இறங்கியது. கிரேன் சக்கரத்தில் சிக்கிய ரஷீத் அகமது அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் கிரேன் டிரைவர், அங்கேயே கிரேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தாம்பரம் போக்குவரத்து துணை கமிஷனர் குமார், பள்ளிக்கரணை சரக துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் அனில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 2 மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீசார் விபத்தில் சிக்கிய கி்யாஸ் லாரி, கிரேன் மற்றும் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்த அப்பகுதி மக்கள் கூறும்போது, "கிழக்கு கடற்கரை சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் ஒரு வழி பாதையை இரு வழி சாலையாக ஏற்படுத்தியதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து விபத்து ஏற்படும் இடத்தில் தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்து போலீசாரை நியமித்தால் விபத்துக்களை தவிர்க்கலாம்" என்றனர்.


Next Story