இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
தானிப்பாடியில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
திருவண்ணாமலை,
தானிப்பாடியில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.
கற்பழித்து கொலை
தானிப்பாடி அருகில் உள்ள குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 36). இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை சே.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள மைதானத்தின் அருகில் உள்ள குளத்திற்கு தூக்கி சென்று கற்பழித்து உள்ளார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து உள்ளார்.
இது குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்தது சதாம்உசேன் என்பது தொியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த நிலையில் இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார். இவ்வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபர் சதாம் உசேனுக்கு கற்பழிப்பு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.