10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்
இரணியல் அருகே இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது குளச்சல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குளச்சல்,
இரணியல் அருகே இன்ஸ்ட்ராகிராம் மூலம் பழகி 10-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது குளச்சல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்ஸ்ட்ராகிராமில் பழக்கம்
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை தெக்கன்தெருவிளையை சேர்ந்தவர் வைகுண்டமணி (வயது27). டி.எம்.இ. படித்துள்ளார். இவருக்கு தக்கலை பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவருடன் இன்ஸ்ட்ராகிராமில் பழக்கம் ஏற்பட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் மாணவியை வைகுண்டமணி திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
மாணவி மீது தாக்குதல்
இதனால் கர்ப்பமான மாணவியை வைகுண்டமணி கேரள மாநிலம் மலப்புறம் பகுதியில் கட்டிட வேலை செய்யும் உறவினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். அப்போது வைகுண்டமணிக்கும் மாணவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வைகுண்டமணி மாணவியை தாக்கியுள்ளார்.
இதுபற்றி மாணவி மலப்புறத்தில் கடையில் வேலை செய்து வந்த தனது தந்தையிடம் கூறினார். அதைதொடர்ந்து மாணவியின் தந்தை பந்தளம் போலீசில் புகார் செய்தார்.
டி.ஜி.பி.யிடம் புகார்
இதையடுத்து மாணவி குமரி மாவட்டத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். ஊருக்கு வந்த மாணவி இதுபற்றி தமிழ்நாடு டி.ஜி.பி.யிடம் புகார் மனு அளித்தார். இந்த மனு மீது நடவடிக்கை எடுக்க குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சூப்பிரண்டு குளச்சல் மகளிர் போலீசாருக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் குளச்சல் மகளிர் போலீசார், வைகுண்டமணி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்தது
இதற்கிடையே மாணவியை அடித்ததாக வைகுண்டமணி மீது பந்தளம் போலீசார் பதிவு செய்த வழக்கும் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரிலும் குளச்சல் மகளிர் போலீசில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் மாணவிக்கு கடந்த 18 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.