பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ரூ.89 லட்சத்துடன் வாலிபர் சிக்கினார்


பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ரூ.89 லட்சத்துடன் வாலிபர் சிக்கினார்
x

பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே ரூ.89 லட்சத்துடன் வாலிபர் சிக்கினார். அது ஹவாலா பணமா? என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சென்னை,

வடமாநிலத்தில் இருந்து பெரம்பூர் ெரயில் நிலையம் வழியாக சென்னைக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு பெரம்பூர் ெரயில் நிலையம் அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது கையில் பெரிய துணிப்பையுடன் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.

ரூ.89 லட்சம் சிக்கியது

அந்த பையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருந்தது. மொத்தம் ரூ.89 லட்சம் இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், சென்னை புரசைவாக்கம், சுந்தரம் லைன் தெருவைச் சேர்ந்த அபிஷேக் என்பது தெரிந்தது.

அவரிடம் பணத்துக்குரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. மேலும் பணம் குறித்து மாறி மாறி தகவல் தெரிவித்தார். எனவே அது ஹவாலா பணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிடிபட்ட அபிஷேக்கையும், அவரிடம் இருந்து பறிமுதல் செய்த பணத்தையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது? எங்கிருந்து, யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து பிடிபட்ட அபிஷேக்கிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Next Story