தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைபாம்பு குட்டிகள் - வாலிபர் கைது


தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த மலைபாம்பு குட்டிகள் - வாலிபர் கைது
x

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த 5 மலைபாம்பு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அந்த விமானத்தில் வந்த பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.

அப்போது தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்றுவிட்டு அந்த விமானத்தில் சென்னை திரும்பி வந்த திண்டுக்கல்லை சேர்ந்த விவேக் (வயது 29) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

அப்போது அவரிடம் இருந்த பிளாஸ்டிக் கூடையை 'ஸ்கேன்' செய்தபோது அதில் காட்டு விலங்குகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே வன விலங்கு அதிகாரிகளை வரவழைத்து ஆய்வு செய்தனர். அதில் 5 பந்து மலை பாம்பு குட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மருத்துவ பரிசோதனை செய்யாமல் வன விலங்குகளை கடத்தி வந்ததால் அவற்றை தாய்லாந்து செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக விவேக்கை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவர் எதற்காக மலைபாம்பு குட்டிகளை கடத்தி வந்தார்? என விசாரித்து வருகின்றனர்.


Next Story