காரில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது
வந்தவாசி அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி
சென்னையில் இருந்து வந்தவாசிக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வந்தவாசி-விளாங்காடு சாலையில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மடக்கிய போது கார் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டி சென்றபோது ஆரியாத்தூர் கிராமம் அருகே சாலையோர முட்பதில் கார் சிக்கி நின்றது. அப்போது காரில் இருந்து ஒருவர் தப்பியோடி விட்டார்.
இதையடுத்து காரில் இருந்த மற்றொரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அவர் விழுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எட்டியப்பன் மகன் ராமன் (வயது 21) என்பதும், தப்பியோடியவர் விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகன் பிரசாந்த் (23) என்பதும், காரில் கஞ்சா கடத்தி வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து ஒரு கிலோ கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமனை கைது செய்தனர். தப்பியோடிய பிரசாந்த்தை தேடி வருகின்றனர்.