பெட்ரோல் பங்கில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபர் கைது
நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே பெட்ரோல் பங்கில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெட்ரோல் பங்கில் கள்ளநோட்டு
நெல்லை அருகே ஆச்சிமடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த 16-ந்தேதி மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் 2 ரூ.500 நோட்டுகளை கொடுத்து ரூ.600-க்கு பெட்ரோல் போட்டுவிட்டு மீதி ரூ.400-யை வாங்கி கொண்டு அங்கிருந்து சென்றனர். அப்போது அவர்கள் கொடுத்தது கள்ளநோட்டு என்பது தெரியவந்தது. இதனையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியரான நொச்சிகுளத்தை சேர்ந்த வேல்ராஜ் என்பவர் சிவந்திபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
வாலிபர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மர்மநபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் பெட்ரோல் பங்கில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டது நெல்லை அருகே உள்ள அரியகுளம் வடக்கு தெருவை சேர்ந்த இசக்கி மகன் சுந்தர் (வயது 24) என்பதும் அவரது பெயர் கடந்த 2021-ம் ஆண்டு முதல் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளது என்பதும் தெரியவந்தது.
கண்ணாடி உடைப்பு
இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிவந்திபட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு இன்ஸ்பெக்டர் அறையில் வைத்து சுந்தரிடம் போலீசார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் இன்ஸ்பெக்டர் அறை கதவின் கண்ணாடியை உடைத்து போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பற்றியும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.