மின்வாரியம் தோண்டிய பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி நண்பர் படுகாயம்


மின்வாரியம் தோண்டிய பள்ளத்தில் விழுந்து வாலிபர் பலி நண்பர் படுகாயம்
x

பூந்தமல்லி அருகே மின்வாரியம் சார்பில் தோண்டிய பள்ளத்தில் மோட்டார் சைக்கிளோடு விழுந்த வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்.

சென்னை

பூந்தமல்லி,

தஞ்சாவூர் மாவட்டம் படப்பைகாடு பகுதியை சேர்ந்தவர் ராமகுணா (வயது 22). இவருடைய நண்பர் மதிவாணன் (24). இவர்கள் இருவரும் பூந்தமல்லியில் அறை எடுத்து தங்கி, அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு ராமகுணா மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். அவருக்கு பின்னால் மதிவாணன் அமர்ந்து இருந்தார்.

பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் அருகே பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, சர்வீஸ் சாலையின் எதிர்திசையில் வந்து கொண்டிருந்தனர்.

அந்த பகுதியில் சர்வீஸ் சாலையில் மின்சார வாரியம் சார்பில் ராட்சத புதைவட மின்கம்பி புதைக்க பள்ளம் தோண்டப்பட்டு அதில் கம்பிகள் கட்டப்பட்டு, கான்கிரீட்டும் போடப்பட்டு வருகிறது. இதற்காக பள்ளத்தின் அருகில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அது பலத்த காற்றில் கீழே சரிந்து விழுந்து கிடந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த பகுதியில் மின் விளக்கு வெளிச்சம் இல்லாததால் அங்கு பள்ளம் தோண்டப்பட்டு இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டு இருப்பதை கவனிக்காமல் ராமகுணா, மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்ததாக தெரிகிறது.

இதனால் மோட்டார்சைக்கிள் வந்த வேகத்தில் சாலையில் சரிந்து கிடந்த இரும்பு தடுப்பில் ஏறி, மின்வாரியம் சார்பில் தோண்டப்பட்ட பள்ளத்தில் நண்பர்கள் இருவரும் மோட்டார் ைசக்கிளோடு விழுந்தனர். இதில் பள்ளத்தில் அமைக்கப்பட்டு இருந்த கான்கிரீட்டில் தலை மோதியதில் படுகாயம் அடைந்த ராமகுணா, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

மதிவாணன் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயங்களுடன் உயிர் தப்பிய மதிவாணனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது மதிவாணன் போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் பள்ளத்தில் விழுந்து இறந்து கிடந்த ராமகுணாவின் உடல் மற்றும் மோட்டார்சைக்கிளை பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர். பின்னர் போலீசார், பலியான ராமகுணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story