ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி


ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் அருகே ரெயில்வே பாலத்தில் ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே ரெயில்வே பாலத்தில் ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலியானார்.

படியில் அமர்ந்து பயணித்ததால் நேர்ந்த இந்த விபரீத சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

படியில் அமர்ந்து பயணம்

சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றின் பாலத்தை கடந்து சென்றது. அப்போது முன்பதிவு செய்யாத பெட்டியின் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த வாலிபர் ஒருவர் ரெயில் பாலத்தை கடந்த பின்னர் அங்கு இல்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அவர் நிலை தடுமாறி ஆற்றில் விழுந்திருக்கலாம் என கருதி சீர்காழி ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றவுடன் அங்குள்ள போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர்.

பரிதாப சாவு

இதனையடுத்து ரெயில்வே போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கொள்ளிடம் பாலத்தில் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ஆற்றின் மணல் பரப்பில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.இதனைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் இறங்கி கயிறு கட்டி அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

பாபநாசம் வாலிபர்

விசாரணையில், ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்த வாலிபர் ெநல்லை மாவட்டம் திருவாலபுரம் கிராமத்தை சேர்ந்த அப்பாஸ்(வயது 21) என்பது தெரிய வந்தது. பெயிண்டரான இவர், சென்னையில் இருந்து பாபநாசம் சென்றார். கொள்ளிடம் பாலத்தில் ரெயில் சென்றபோது படிக்கட்டில் இருந்து நிலை தடுமாறி பாலத்தில் மோதி ஆற்றின் மணல் திட்டில் விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

சக பயணிகள் துரிதமாக தகவல் கொடுத்த நிலையிலும் படுகாயம் அடைந்ததால் வாலிபரின் உயிரற்ற உடலையே மீட்க முடிந்தது. படியில் பயணம் செய்வது ஆபத்தானது என எவ்வளவு எச்சரித்தும் அதனை பின்பற்றாததால் இதுபோன்ற இழப்புகள் ஏற்படுவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story