மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு


மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு
x

நெல்லை டவுனில் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுனில் மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.

தொழிலாளி

நெல்லை டவுன் கன்னியாகுடி தெருவைச் சேர்ந்தவர் அன்வர் (வயது 28). தொழிலாளி. இவர் நேற்று மாலையில் டவுன் குன்னத்தூர் ரோடு கால்வாய் கரையில் நிற்கும் பழமையான மருத மரத்தில் ஏறினார் அவர் உச்சி கிளையில் அமர்ந்து கொண்டு கூச்சலிட்டார். தனது குடும்ப சொத்து பிரச்சினையை தீர்த்து வைக்கவில்லையெனில் மரத்தில் இருந்து குதித்து விடுவதாக தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

உடனே அக்கம்பக்கத்தினர் மரத்தின் அருகில் உள்ள மொட்டை மாடிக்கு சென்று, அங்கிருந்து அன்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர் கீழே இறங்க மறுத்து விட்டார். தொடர்ந்து அங்கு வந்த அன்வரின் குடும்பத்தினரும் அவரை கீழே இறங்க கூறியும், அவர் மறுத்து விட்டார்.

கையை அறுத்து கொண்டதால்...

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் வெட்டும்பெருமாள், பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்தையா ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அன்வர் மரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் அவரை பாதுகாப்பாக மீட்கும் வகையில், அங்கு பெரிய துணியை விரித்து, மெத்தையும் அமைத்தனர்.

தொடர்ந்து 2 தீயணைப்பு வீரர்கள் கயிறுடன் மரத்தில் ஏறினர். அவர்கள், அன்வரின் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அன்வர் திடீரென்று பிளேடால் தனது உடலை கிழித்து கொண்டதால் ரத்தம் பீறிட்டது.

பாதுகாப்பாக மீட்பு

எனினும் அவரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்ைத நடத்தியதை தொடர்ந்து, அன்வர் மரத்தில் இருந்து கீழே இறங்க சம்மதித்தார். இதையடுத்து அவரை நைசாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். பாதி வழியில் வந்தபோது அன்வர் திடீரென்று மயங்கியதால் அவரை கயிறு கட்டி பாதுகாப்பாக கீழே இறக்கினர். தொடர்ந்து அங்கு தயாராக இருந்த 108 ஆம்புலன்சில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதுதொடர்பாக நெல்லை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை டவுனில் மரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story