சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது
ஆன்லைன் கேம் மூலம் பழக்கம் ஏற்பட்ட சிறுமியிடம் 12 பவுன் நகைகளை ஏமாற்றி வாங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆன்லைன் கேம் மூலம் பழக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஆன்லைனில் பிரீபயர் கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். இந்த விளையாட்டு மூலம் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியை சேர்ந்த என்ஜினீயர் வேல்முருகன் (வயது 22), என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது.
இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேல்முருகன், சிறுமியிடம் பிரீபயர் கேம் விளையாடுவதற்கு பணம் தேவைப்படுகிறது. எனக்கு பணம் கொடு என்று கேட்டுள்ளார்.
12 பவுன் நகைகளை வாங்கிய வாலிபர்
இதை நம்பி சிறுமி வேல்முருகன் கேட்கும் போதெல்லாம் வீட்டில் இருந்த தனது அம்மாவின் நகைகளை வீட்டிற்கு தெரியாமல் வேல்முருகனுக்கு கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார். இவ்வாறு சிறுமி மொத்தம் 12 பவுன் தங்க நகைகளை அனுப்பியதாக தெரிகிறது.
வீட்டில் உள்ள நகைகள் மாயமானதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மகளின் நடவடிக்கையில் சந்தேகமடைந்து அவரிடம் இதுகுறித்து கேட்டபோது சிறுமி ஆன்லைன் மூலம் பழக்கம் ஏற்பட்ட வாலிபரிடம் நகைகளை கொடுத்ததாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் கூடுவாஞ்சேரியில் உள்ள வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வேல்முருகன் மீது புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வண்டலூர் அனைத்து மகளிர் நிலைய போலீசார் வேல்முருகனை கைது செய்தனர்.