பெண் குழந்தையை கொல்ல கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை
திருக்கோவிலூரில் பெண் குழந்தையை கொல்ல கூறி கணவர் குடும்பத்தினர் மிரட்டியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலைக்கு முன் எழுதிய 4 பக்க கடிதம், வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தைப்பேட்டையை சேர்ந்தவர் சையத் ஜிலானி மகன் தஸ்தகீர்(வயது 27). இவரும், அதே பகுதியை சேர்ந்த பி.சி.ஏ. பட்டதாரியான ரிஸ்வான் மகள் அப்சா(வயது 23) என்பவரும் காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது. அப்சாவை, அவரது கணவர் தஸ்தகீர், மாமனார் சையத் ஜிலானி, மாமியார் ஷிரின், கொழுந்தனார் ரப்பானி, நாத்தனார்கள் கவுசின், ஷாஜிதா மற்றும் ஷாஜிதாவின் கணவர் முஸ்தாக் ஆகியோர் ஒன்று சேர்ந்து வரதட்சணை கேட்டு துன்புறுத்தி, கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் 3 மாத பெண் குழந்தையை கொல்ல சொல்லி மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அப்சா, தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அப்சா அவரது தாய் தவுலத்திடம் தண்ணீர் கேட்டார். பின்னர் சற்று நேரத்தில் மயங்கி விழுந்த அவரை பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். அப்சா, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இது குறித்து அப்சாவின் தாய் தவுலத் கொடுத்த புகாரின் பேரில் கணவர் தஸ்தகீர், சையத் ஜிலானி, ஷிரின், ரப்பானி, கவுசின், ஷாஜிதா, முஸ்தாக் ஆகிய 7 பேர் மீது திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து அப்சாவின் உடலை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தது. திருக்கோவிலூர் தீயணைப்பு நிலையம் எதிரே வந்த போது அப்சாவின் உறவினர்கள் ஆம்புலன்சை வழிமறித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அப்சாவின் சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து அப்சாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பவத்துக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனிடையே அப்சா தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த 4 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், திருமணமான சில நாட்களிலேயே கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். இதனிடையே எனக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை கொல்ல சொல்லி கணவர் குடும்பத்தினர் மிரட்டினர். பெண் குழந்தையை பெற்றது என் குற்றமா?. என் குழந்தையை கொல்ல விருப்பமில்லை.
இந்த உலகில் என் குழந்தை வாழ வேண்டும். நான் சாகிறேன். எனது சாவுக்கு காரணமான கணவர் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் விஷம் தின்றபடி(எலி பேஸ்ட்) வீடியோ பதிவிட்டு, அவர் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் குறித்து கூறியுள்ளார். அந்த வீடியோ, 4 பக்க கடிதம் சமூகவலைத்தளத்தில் வைரலாகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.