நாற்றங்கால் பண்ணைகளில் விதை ஆய்வு துறை குழுவினர் திடீர் ஆய்வு


நாற்றங்கால் பண்ணைகளில் விதை ஆய்வு துறை குழுவினர் திடீர் ஆய்வு
x

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நாற்றங்கால் பண்ணைகளில் விதை ஆய்வு பறக்கும் படை குழுவினர் திடீரென ஆய்வு நடத்தினார்கள்.

தர்மபுரி

பறக்கும் படை அமைப்பு

தர்மபுரி மாவட்டத்தில் காய்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடும் பரப்பு அதிகரித்துள்ளது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான செடிகள் மற்றும் நாற்றுகளை நாற்றங்கால் பண்ணைகள் மற்றும் நர்சரிகளில் விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நாற்றங்கால் பண்ணைகள் மற்றும் நர்சரி பண்ணைகளின் செயல்பாடு, அங்கு விற்பனை செய்யப்படும் நாற்றுகள் தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்த விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குனர் சங்கர் தலைமையில் துறை அலுவலர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டது.

ரசீது வழங்க வேண்டும்

இந்த குழுவினர் நாற்றங்கால் பண்ணைகள் மற்றும் நர்சரி பண்ணைகளில் திடீரென ஆய்வு நடத்தினார்கள். அப்போது நாற்றங்கால் பண்ணை மற்றும் நர்சரி உரிமையாளர்கள் விதை சான்றளிப்பு துறை மூலம் வழங்கப்படுகின்ற நர்சரி உரிமத்தை பெற்று உள்ளனரா? அந்த உரிமத்தை விவசாயிகளின் பார்வையில் படும்படி வைத்து பராமரிக்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோல் விதை கொள்முதல் செய்யும் போது அதற்கான ரசீது முறையாக வழங்கப்படுகிறதா? விவசாயிகளுக்கு பழ செடிகள், நாற்றுகள் விற்பனை செய்யும் போது அதற்குரிய ரசீது உரிமையாளர்களால் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

மேலும் நாற்றங்கால் பண்ணைகளில் விற்பனை செய்யப்படும் நாற்றுகள் மற்றும் செடிகளின் தரம் குறித்தும் அலுவலர்கள் குழுவினர் ஆய்வு நடத்தினர். அப்போது கொள்முதல் செய்வோருக்கு முறையாக ரசீது வழங்க வேண்டும். செடிகள் மற்றும் நாற்றங்கால் தரத்தை பராமரிக்க வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


Next Story