பண்ருட்டி அருகே பெண்கள் திடீர் சாலை மறியல்
பண்ருட்டி அருகே பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் வேலை கிடைக்காத பெண்கள் மாளிகைமேடு-விழுப்புரம் மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த அண்ணாகிராம ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி மீராகோமதி, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கோரி வட்டார வளர்ச்சி அதிகாரி மீராகோமதியிடம் மனு அளித்தனர். இதை ஏற்ற அவர் வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதியளித்ததை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.