விழுப்புரம் அருகே மேம்பாலத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டம்
விழுப்புரம் அருகே மேம்பாலத்திற்கு சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை விரிவாக்க பணி
விழுப்புரத்தை அடுத்த சிறுவந்தாடு அருகே உள்ள மேட்டுப்பாளையம் தென்பெண்ணையாற்று பகுதியில் மேட்டுப்பாளையத்தையும், மேல்குமாரமங்கலத்தையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்பட்டு சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த மேம்பாலத்திற்கு அருகில் உள்ள சாலை வழியாக கிராம மக்கள், விவசாயிகள் பலர் வயல்வெளியில் விளையும் விளைபொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கிராம மக்கள், விவசாயிகள் மிகவும் அத்தியாவசிய தேவைக்காக பயன்படுத்தி வந்த இந்த சாலையை துண்டித்து சாலை விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராம மக்கள் போராட்டம்
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை அப்பகுதியில் திடீரென ஒன்றுதிரண்டு சாலை விரிவாக்க பணியை தடுத்து நிறுத்தியதோடு அப்பணியில் ஈடுபட்டிருந்த வாகனங்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார், அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சர்வீஸ் சாலை அமைப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீசார் கூறியதை தொடர்ந்து கிராம மக்கள், தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பணிகள் நிறுத்தி வைப்பு
அதனை தொடர்ந்து பாலம் கட்டுமான ஒப்பந்ததாரர்களிடம் இப்பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்காமல் சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தியதன்பேரில் அவர்கள், தற்காலிகமாக சாலை விரிவாக்க பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர். இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.