கிராம மக்கள் திடீர் போராட்டம்
ஆலங்குளம் அருகே கிராம மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையம்:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கீழக்குத்தப்பாஞ்சான் கிராமத்தில் சுமார் 200 வீடுகள் உள்ளன. இங்கு ஏற்கனவே அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த நிலையில் அங்கு வசிக்கும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அந்த பள்ளிக்கு அனுப்ப மறுத்தனர். மேலும் தங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் படிக்கும் வகையில் அரசு தொடக்கப்பள்ளி தொடங்க வேண்டும் என்று கூறி கடந்த 8 ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி, அங்குள்ள அம்மன் கோவில் திடலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை நடந்தபோதே, கிராம மக்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக 43 பெண்கள் உள்பட 68 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.