சக்கரக்கோட்டை சரணாலயத்தில் திடீரென குவியும் பறவைகள்


சக்கரக்கோட்டை சரணாலயத்தில் திடீரென குவியும் பறவைகள்
x
தினத்தந்தி 28 Aug 2023 12:15 AM IST (Updated: 28 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் வற்றிவரும் நிலையில் திடீரென பறவைகள் குவிந்து வருகின்றன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் வற்றிவரும் நிலையில் திடீரென பறவைகள் குவிந்து வருகின்றன.

பறவைகள் சரணாலயம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களுக்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இரை தேடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தந்து கூடுகட்டி உணவு தேவையை பூர்த்தி செய்து சீசன் முடிந்ததும் ஏப்ரல் மாத இறுதியில் திரும்பி செல்வது வழக்கம். கடந்த ஆண்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சரியாக பெய்யாததால் நீர்நிலைகள் அனைத்தும் வறண்டன. ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மட்டும் வைகை தண்ணீர் வரத்தால் ஓரளவு நீர் இருந்ததால் அதில் உள்ள மரங்களில் கூடுகள் கட்டி தங்கியிருந்த பறவைகள் ஏமாற்றத்துடன் தங்கள் வாழ்விடத்தை நோக்கி சென்றுவிட்டன. இதனால் அனைத்து சரணாலயங்களும் பறவைகள் இன்றி நிசப்தமாகவே காட்சி அளித்தது.

கடந்த ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் மாவட்ட சரணாலயங்களில் வந்தநிலையில் கடந்த ஆண்டு மொத்தமே 7 ஆயிரம் பறவைகள்தான் வந்துள்ளது. ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய பகுதியில் கடந்த ஆண்டு வைகை தண்ணீர் வரவழைக்கப்பட்டு நிறைக்கப்பட்டதால் கடந்த ஜூன் மாத இறுதி வரை தண்ணீர் குறையாமல் கடல்போல் காட்சி அளித்தது. இதன்காரணமாக சக்கரக்கோட்டை கண்மாய் பகுதியில் உள்ள மரங்களில் ஏராளமான பறவைகள் உணவு தேவைக்காக கூடு கட்டி வசித்து வந்தன.

குவிந்த பறவைகள்

ஆனால் மற்ற சரணாலயங்கள் பறவைகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. சக்கரக்கோட்டை கண்மாயில் மட்டும் அதிகளவில் பறவைகள் கூடுகட்டி தண்ணீரில் உள்ள மீன்கள், புழுக்கள் உள்ளிட்ட உணவுகளை உண்டு பறந்து திரிந்துவந்தன. பின்னர் அங்கும் பெரும்பாலான பகுதியில் தண்ணீர் வற்றிய நிலையில் ஆர்.எஸ்.மடையை ஒட்டிய கடைமடை பகுதியில் மட்டும் தண்ணீர் இன்னும் ஓரளவு உள்ளது. இந்த தண்ணீரை ஒட்டிய பகுதியில் உள்ள மரங்களில் கூடு கட்டி வாழ்ந்து வரும் பறவைகள் புழு, பூச்சிகள், மீன்களை உண்டு பசியை போக்கி வருகின்றன.

சில பறவைகள் மட்டுமே இவ்வாறு சுற்றித்திரிந்து வந்த நிலையில் கடந்த 3 தினங்களாக அங்கு நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் திடீெரன்று வந்து குவிந்துள்ளன. இந்த பறவைகள் திடீரென்று இந்த பகுதிக்கு ஏன் வந்துள்ளன என்று தெரியவில்லை.

இரை இல்லாத நிலை

இதுகுறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, மாவட்டத்தின் அனைத்து நீர்நிலைகளும் ஏறத்தாழ வறண்டு விட்டன. அதில் உள்ள மீன்கள் ஏலம் விடப்பட்டு பிடிக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக பறவைகளுக்கு இரை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேங்கி உள்ள சக்கரக்கோட்டை பகுதியில் வளர்ந்துள்ள மீன்கள், புழு பூச்சிகளை உண்பதற்காக பறவைகள் குவிந்துள்ளன என்றனர். பறவைகள் இரைதேடி கரைந்தபடி அங்கும் இங்கும் பறந்து திரிவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story