கழிவுநீர் கால்வாயில் திடீரென பற்றி எரிந்த தீ


கழிவுநீர் கால்வாயில் திடீரென பற்றி எரிந்த தீ
x

கடலூரில் கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

வெளியேறிய புகை

கடலூர் மாநகரின் மையப்பகுதியில் உள்ள பாரதி சாலை, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்த சாலையாக உள்ளது. மேலும் இந்த சாலையில் போலீஸ் நிலையம், பள்ளிக்கூடங்கள், பெட்ரோல் பங்க், வணிக வளாகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் பாரதி சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் உள்ள ஒரு கடையின் முன்பு செல்லும் கழிவுநீர் கால்வாயில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல சுமார் 10 அடி உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் தீப்பற்றி எரிந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்திலேயே பெட்ரோல் பங்க் இருந்ததால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பரபரப்பு

அதன் பேரில் கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்தனர். அப்போது கழிவுநீர் கால்வாயில் எரிந்த தீயை நுரை கலவையை பயன்படுத்தி அணைத்தனர். தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இருப்பினும் சாலையோரத்தில் இருந்த கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், கழிவுநீர் கால்வாயில், கழிவு ஆயில் அதிகளவில் படிந்துள்ளது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. நீண்ட நாட்களாக கால்வாயில் படிந்திருந்த ஆயில் மீது அந்த வழியாக சென்ற யாரோ சிகரெட் பிடித்து விட்டு, அதனை அணைக்காமல் கால்வாயில் வீசியதால் தீப்பிடித்து எரிந்திருக்கலாம். இந்த தீயை தண்ணீரை கொண்டு அணைக்க முடியாது. நுரை கலவை மூலமாக தான் அணைக்க முடியும் என்றார்.


Related Tags :
Next Story