காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து


காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து
x

காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சாம்பலாகின.

காஞ்சிபுரம்

அரசு ஆஸ்பத்திரி

காஞ்சீபுரம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திாியில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நோயாளிகள் பார்க்க வரும் உறவினர்கள், டாக்டர்கள், நர்சுகள் என மக்கள் நடமாட்டம் அதிக அளவில் தினமும் குவிகிறார்கள். இதனால் ஆஸ்பத்திரியில் உள்ள புறநோயாளிகள் அறை, அவசரகால சிகிச்சை பிரிவு அறை, ஆபரேஷன் தியேட்டர் உள்பட பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் நவீன கட்டுப்பாட்டு மையத்தின் அறை ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.

திடீர் தீ

இந்த நிலையில் நேற்று காலை திடீரென இந்த கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மைய அறையில் தீப்பிடித்தது. மின்னல் வேகத்தில் பற்றிய தீயானது மளமளவென அருகில் இருந்த அறைகளுக்கும் பரவியது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடடிக்கையாக கண்காணிப்பு அறைக்கு அருகில் இருந்து கட்டிட அறைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர். இதனால் பெரும் அசம்பாவிதம் நிகழாமல் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் கட்டிடத்தில் பரவி இருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்படுத்தினர். இந்தநிலையில் மீட்புப்பணி நடந்து வருகிறது.

விசாரணை

இதனால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின. கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மைய அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள். இதுகுறித்து பல கோணங்களில் விரிவான விசாரணையில் போலீசார் ஈடுபடுகிறார்கள். தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சிறிது நேரத்தில் போர்களம் போல் காட்சி அளித்தது. அரசு ஆஸ்பத்திரியில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story