கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்த மாணவி படுகாயம்


கல்லூரி விடுதி மாடியில் இருந்து குதித்த மாணவி படுகாயம்
x

திருச்சியில் கட்டாயப்படுத்தி விடுதியில் சேர்த்ததால் மாடியில் இருந்து குதித்ததில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.

திருச்சி

மலைக்கோட்டை, ஆக.4-

திருச்சியில் கட்டாயப்படுத்தி விடுதியில் சேர்த்ததால் மாடியில் இருந்து குதித்ததில் கல்லூரி மாணவி படுகாயம் அடைந்தார்.

கல்லூரி மாணவி

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தின் தாக்கம் குறைவதற்குள் திருச்சியிலும் கல்லூரி மாணவி ஒருவர் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தேவாத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது பெண், திருச்சி கோட்டை பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. வேதியியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவரை கடந்த மாதம் (ஜூலை) 21-ந் தேதி கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் பெற்றோர் சேர்த்துள்ளனர். ஆனால் மாணவி விடுதியில் சேர்ந்து பயில விருப்பம் இல்லை என்றும், தினசரி ெரயிலில் வந்து செல்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் பெற்றோர் அவரை கட்டாயப்படுத்தி விடுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.

மாடியில் இருந்து குதித்தார்

12-ம் வகுப்பு வரையில் பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வந்த அவருக்கு மனதளவிலும், உடல் அளவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் விடுதியைவிட்டு வந்துவிடுவதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் மாணவியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மறுத்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த மாணவி, நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து விடுதிக்கு வந்துள்ளார். பின்னர் அவர் விடுதியின் முதல் மாடியில் இருந்து குதித்ததாக தெரிகிறது.

இதில் பலத்த காயமடைந்த மாணவியை, கல்லூரி நிர்வாகத்தினர் மீட்டு, திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பெற்றோர் போலீசில் புகார் கொடுக்க மறுத்து விட்டனர். எனினும் கோட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story