பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு
பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிவு சிகிச்சைக்கு பிறகு ஆசிரியர் உதவியுடன் தேர்வு எழுதினார்
விழுப்புரம்
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் முரளிதரன் மகள் ஷர்மிளா (வயது 17). விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் இவர் நேற்று தேர்வு எழுதுவதற்காக அவரது தாயுடன் ஸ்கூட்டரில் தேர்வு மையமான அரசு மகளிர் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். காலை 9 மணியளவில் பள்ளி அருகே வந்தபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள், அவர்களது ஸ்கூட்டரின் மீது மோதியது. இதில் காயம்அடைந்த மாணவி ஷர்மிளாவை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை டாக்டர்கள் கண்டறிந்தனர். அப்போது மாணவி ஷர்மிளா, தான், பிளஸ்-2 இறுதித்தேர்வான உயிரியல் தேர்வை கட்டாயம் எழுதி முடிக்க வேண்டும் என்றும், நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்வதுதான் தனது குறிக்கோள் என்றும், இதற்கு உதவி செய்யுங்கள் என்றும் டாக்டரிடம் கூறினார்.
இதையடுத்து டாக்டர்கள் ஆலோசனை செய்து, அம்மாணவிக்கு காலில் மாவுக்கட்டுப்போட்டு ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர். காலை 10.45 மணிக்கு வந்த மாணவி ஷர்மிளா, தனக்கு நேர்ந்த விபத்து குறித்து அங்கிருந்த ஆசிரியர்களிடம் எடுத்துரைத்தார். அதன் பின்னர் ஷர்மிளாவுக்கு தரைத்தளத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு அவர் சொல்வதை எழுதுவதற்காக ஒரு ஆசிரியரும் பணியில் அமர்த்தப்பட்டார். அதன்படி மாணவி, கேள்வியை படித்து பார்த்து அதற்குரிய பதில் கூற அதை ஆசிரியர், விடைத்தாளில் எழுதினார். ஷர்மிளாவுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது. விபத்தில் சிக்கிய மாணவி மன தைரியம் மற்றும் விடாமுயற்சியுடன் வந்து தேர்வு எழுதியதை கண்டு சக மாணவிகள் அவரை வெகுவாக பாராட்டினர்.