தோல்வி பயத்தால் 'நீட்' தேர்வு எழுதிய மாணவி தற்கொலை
தோல்வி பயத்தால், ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர்,
கரூர் மாவட்டம் கொளுத்தினிப்பட்டியை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 18). பிளஸ்-2 முடித்த இவர் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். இந்த ஆண்டு நீட் தேர்வுக்காக வேங்காம்பட்டியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி படித்தார்.
கடந்த மாதம் நடந்த நீட் தேர்வை எழுதினார். இந்நிலையில் கடந்த ஆண்டைபோலவே இந்தாண்டும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து விடுவேனோ என அடிக்கடி வீட்டில் சொல்லி கொண்டு புலம்பி வந்துள்ளதாக தெரிகிறது.
தற்கொலை
இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரீத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீட் தேர்வு எழுதிய மாணவி தோல்வி பயத்தால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.