தமிழ் இலக்கியங்களில் சாதனை படைத்த காரைக்குடி பள்ளி மாணவர்
காரைக்குடி பள்ளி மாணவர் தமிழ் இலக்கியங்களில் சாதனை படைத்துள்ளார்.
காரைக்குடி
காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவர் செந்தமிழ்ச்செல்வன் பல தமிழ் இலக்கியங்களை படித்து சாதனை படைத்துள்ளார். மேலும் திருக்குறள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த இவர் தமிழக அரசின் குறள் பரிசு திட்டத்தில் தேர்ச்சி பெற்று ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, நன்னெறி, நறுந்தொகை, உலகநீதி உள்ளிட்ட அறஇலக்கிய நூல்களில் உள்ள பல பாடல்களை மனப்பாடமாகவும் கூறும் திறன் பெற்றுள்ளார்.
மேலும் பக்தி இலக்கியங்களான சிவபுராணம், திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி நூல்களில் பல பாடல்களை நிறைவாற்றலுடன் கூறி கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள், பாரதிதாசன் கவிதைகள், என பல நூல்களை படித்துள்ளார்.
இதுகுறித்து மாணவர் செந்தமிழ்ச்செலவன் கூறியதாவது:-
எனது தந்தையின் ஊக்கத்தால் கொரோனா காலக்கட்டத்தில் 2-ம் வகுப்பு படிக்கும்போதே திருக்குறளை பார்த்து எழுத தொடங்கிய நான் தமிழை எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொண்டேன். அதன் பின்னர் திருக்குறள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் காலக்கட்டத்தில் 6 மாதங்களில் திருக்குறளை முழுமையாக படித்தேன்.
இந்த வெற்றிக்கு எனது தாய், தந்தை மற்றும் பள்ளி முதல்வர் ஹேமமாலினிசுவாமிநாதன் ஆகியோரின் ஊக்கம் தான். தொடர்ந்து தமிழாலும், திருக்குறலாலும் வெற்றி பெற்ற நான் அதன் வழி நடக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.