ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா


ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா
x

பழனி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோத திருவிழா நடந்தது.

திண்டுக்கல்

பழனி அருகே ராசாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற தலைவாசல் கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரியமாக நடக்கும் திருவிழாவில் உலக நலன், விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் விழாவையொட்டி நடக்கிற கறி விருந்து நிகழ்ச்சியில், ஆண்கள் மட்டுமே பங்கேற்பது கூடுதல் சிறப்பு.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் கருப்பண்ண சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கோவில் சார்பில் கிடாய்கள் பலியிடப்பட்டன. அதன்பிறகு அங்கேயே கிடாய்களை உரித்து சமையல் பணி நடந்தது. இறைச்சி, குடல் என தனித்தனியாக கம, கம வாசனையுடன் குழம்பு தயாரானது. இதேபோல் சோறு தயார் செய்யப்பட்டது.

பின்னர் அவற்றை சுவாமிக்கு படையலிட்டு சிறப்பு தீபாராதனை, வழிபாடு நடந்தது. இதனையடுத்து கறி விருந்து தொடங்கியது. இதில் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள், வாலிபர்கள், முதியோர்கள் என ஆண்கள் மட்டும் கலந்துகொண்டு ருசித்து சாப்பிட்டனர். அதிகாலை 3 மணிக்குள் விருந்து நிறைவுபெற்று அனைவரும் அங்கிருந்து கிளம்பி சென்றனர். இதற்கிடையே மீதமான உணவுகளை கோவில் பகுதியில் குழி தோண்டி புதைத்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ராசாபுரம் பகுதி மக்கள் செய்திருந்தனர்.


Next Story