சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் ரூ.1 கோடியில் அதிநவீன கன்வேயா் எந்திரம்
சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் ரூ.1 கோடியில் அதிநவீன கன்வேயா் எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு சரக்கு முனையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 800 டன் எடையிலான சரக்குகள் கையாளப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் சரக்குகளை விரைவாகவும், எளிமையாகவும் கையாளுவதற்கு தானியங்கி முறையில் சரக்கு பார்சல்களை எடுத்து செல்லும் எந்திரம் 2021-ம் ஆண்டு சென்னை விமான நிலைய பன்னாட்டு சரக்ககத்தில் அமைக்கப்பட்டது. இந்த எந்திரம் வாயிலாக 750 கிலோ எடையிலான சரக்கு பார்சல்களை நிமிடத்துக்கு 30 மீட்டர் வரையில் எடுத்து செல்ல முடியும்.
இந்தநிலையில் தற்போது அதிக எடை கொண்ட கனரக சரக்கு பார்சல்களை கையாளும் வகையில் ரூ.1 கோடி மதிப்பில் 90 மீட்டர் நீளத்துக்கு நவீன கன்வேயா் எந்திரம் நிறுவப்பட்டு உள்ளது. 1½ டன் எடை கொண்ட சரக்கு பார்சலை 3 நிமிடத்தில் 90 மீட்டர் வரை இந்த ஏந்திரத்தால் எடுத்து செல்ல முடியும். ஒரே நேரத்தில் 68 டன் எடை வரை கொண்ட சரக்குகளை டெலிவரி மையத்துக்கு கொண்டு செல்ல முடியும்.
தென் இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலைய சரக்கு முனையத்தில் இந்த நவீன கன்வேயா் எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சென்னை பன்னாட்டு விமான நிலைய சரக்கு முனையத்தில் அதிக எடையுடைய பார்சல்களை விரைவாகவும், எந்த சேதாரமும் இல்லாமல் பத்திரமாக டெலிவரி செய்ய முடியும். இதனால் சென்னை பன்னாட்டு சரக்கக முனையத்தில் இறக்குமதியாளர்களுக்கு விரைவான சேவைகளை வழங்க முடியும் என விமான நிலைய சரக்கக அதிகாரிகள் தெரிவித்தனா்.