திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு


திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு
x

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று டீன் நேரு கூறினார்.

திருச்சி

குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது என்று டீன் நேரு கூறினார்.

குரங்கு அம்மை நோய்

உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் இந்த நோயின் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

குரங்கு அம்மை நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்தநிலையில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

8 படுக்கைகளுடன் தயார்

இங்கு 8 படுக்கைகள் போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் இந்த வார்டில் செய்யப்பட்டுள்ளன. இந்த சிறப்பு வார்டை டீன் நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குரங்கு அம்மை என்பது ஒருவகையான அம்மை நோய். இது வைரசில் இருந்து பரவுகிறது. சின்னம்மை, பெரியம்மை நோய் போல குரங்குகளிடம் இருந்து பரவிய அம்மை நோய் முதன் முதலில் ஆப்பிரிக்கா நாடுகளில் பரவியது. இந்த ஆண்டு ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் குரங்கு அம்மை நோய் பரவல் தொடங்கியது.

நோய் அறிகுறி

இந்த நோய்க்கு உடல் தளர்ச்சி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்பளங்கள், நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, உடல் சோர்வு, தொண்டை புண், இருமல், கண்வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, வலிப்பு, மூச்சு விடுவதில் சிரமம், இடுப்பு வலி உள்ளிட்டவை அறிகுறிகளாக அறியப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளுக்கு பிறகு குரங்கு அம்மை நோயானது ஆறு முதல் 13 நாட்களில் தீவிரமடையலாம். அப்போது கொப்பளங்கள் அதிகரிக்கலாம். இந்த நோய் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

குரங்கு அம்மை நோய் அனைத்து வயதினரையும் தாக்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். அதோடு வளர்ப்பு பிராணிகள் உள்பட விலங்குகளிலும் இருந்து விலகி இருக்க வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், மூக்கு, வாய் பகுதிகளை அடிக்கடி தொடாமல் இருத்தல், முககவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றினால் இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம்.

இவ்வாறு டீன் நேரு கூறினார்.


Next Story