தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆக்கி போட்டி


தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆக்கி போட்டி
x

தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையே ஆக்கி போட்டி நடைபெற்றது.

திருச்சி

திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் 21-வது தென்னிந்திய அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான காஜாமியான் கோப்பை ஆக்கி போட்டி நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் திருச்சி ஜமால்முகமது, பிஷப் ஹீபர் உள்ளிட்ட 18 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடக்கின்றன.

இதில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் ஜி.டி.என். அணியும், ராசிபுரம் முத்தாயம்மாள் கல்லூரி அணியும் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஆடிய திண்டுக்கல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றியை தனதாக்கியது. மற்றொரு ஆட்டத்தில் காரைக்குடி அழகப்பா அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருப்பத்தூர் அணியை தோற்கடித்தது. மேலும் ஒரு போட்டியில் கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி அணி 1-0 என்ற கோல் கணக்கில் திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரி அணியை வீழ்த்தியது.

முன்னதாக நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் வருமான வரித்துறை ஆய்வாளரும், இந்திய ஆக்கி வீரருமான மாரீஸ்வரன் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஜமால்முகமது கல்லூரியின் பொருளாளர் ஜமால் முகம்மது, கல்லூரியின் உறுப்பினர் மற்றும் கவுரவ இயக்குனர் அப்துல் காதர் நிஹால், முதல்வர் இஸ்மாயில் முகைதீன், செயலாளர் காஜா நஜிமுதீன், உடற்கல்வி இயக்குனர் ஷாயின்ஷா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் போட்டிகள் நடக்கின்றன.


Next Story