போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
தேனி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணவேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்து எழுச்சி முன்னணி தேனி நகர செயலாளர் கோட்டைச்சாமி தலைமையில் நிர்வாகிகள் சிலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், தேனி நகரில் விழாக் காலங்களிலும், ரெயில் வரும் நேரங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு தேனி வழியாக ஏராளமான வாகனங்களில் பக்தர்கள் சென்று வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. எனவே தேனி நகரின் வரைபடத்தில் உள்ள திட்டச்சாலைகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழிச் சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதுபோல் தர்மாபுரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.