தக்காளி விலை சற்று அதிகரிப்பு


தக்காளி விலை சற்று அதிகரிப்பு
x

நெல்லையில் தக்காளி விலை நேற்று சற்று அதிகரித்து கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருநெல்வேலி

சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் தக்காளி விலை கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. வரலாறு காணாத அளவுக்கு கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.200-ஐ தாண்டியது.

இந்த நிலையில் தக்காளி வரத்து அதிகரித்ததையொட்டி அதன் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று முன்தினம் பாளையங்கோட்டை உழவர் சந்தையில் 1 கிலோ தக்காளி ரூ.75-க்கும், சில்லறை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை குறையும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று தக்காளி விலை சற்று அதிகரித்தது. அதாவது உழவர் சந்தையில் ரூ.100 ஆகவும், சில்லறை கடைகளில் ரூ.120 ஆகவும் விற்கப்பட்டது.

இதுதவிர விலை உயர்ந்து காணப்படும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை அதே நிலவரத்தில் நீடித்து வருகிறது. அதாவது இஞ்சி தரம் வாரியாக ரூ.150 முதல் ரூ.250 வரையும், பூண்டு தரம் வாரியாக ரூ.180 முதல் ரூ.300 வரையும் விற்பனை ஆகிறது. மற்ற காய்கறிகளின் விலை வழக்கம் போல் நீடித்து வருகிறது.


Next Story