சென்னை நகரவாசிகளின் வாழ்வியல் அங்கம்: 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணா மேம்பாலம்


சென்னை நகரவாசிகளின் வாழ்வியல் அங்கம்: 50-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணா மேம்பாலம்
x

சென்னை நகர மக்களின் வாழ்வியலுடன் இணைந்த அண்ணா மேம்பாலம் 49-வயதை நிறைவு செய்து, 50-ம் ஆண்டு தொடக்கத்தில் இன்று கால் தடம் பதிக்கிறது.

சென்னை

சென்னையில் எத்தனையோ மேம்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் அண்ணா மேம்பாலத்திற்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இதனை அன்றைய காலத்தில் ஜெமினி மேம்பாலம் என்று அழைத்தது உண்டு. சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம் இதுதான். இந்திய அளவில் மூன்றாவதாக கட்டப்பட்ட மேம்பாலம் என்ற சிறப்புக்கும் உரியது. 1973-ம் ஆண்டு இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தியாவிலேயே நீண்ட பாலமாகத் திகழ்ந்தது. குதிரைப் பந்தயத்தைத் தடை செய்ததை நினைவுகூரும் வகையில் பாலத்தின் கீழே குதிரையைக் கட்டுப்படுத்தும் மனிதன் சிலை அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மணி நேரத்தில் ஏறத்தாழ 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாலத்தின் வழியாக செல்கின்றன.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் அண்ணா மேம்பாலம் நேற்று தனது 49-வது பிறந்தநாளை நிறைவு செய்து, 50-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

அண்ணா சாலை தலைமைச் செயலகம் முதல் கிண்டி வரை 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீண்டு அமைந்துள்ளது. சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில், அண்ணா சாலை - நுங்கம்பாக்கம் சாலை - ராதாகிருஷ்ணன் சாலை - ஜி.என். செட்டி சாலைகள் சந்திக்கும் பகுதியில் மேம்பாலம் ஒன்றை கட்ட கடந்த 1971-ம் ஆண்டு திட்டமிடப்பட்டபோது, அதற்கு ரூ.66 லட்சம் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

250 அடி நீளம், 48 அடி அகலத்தில் அனைவரும் வியக்கும் வண்ணம் மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த மேம்பாலம் அமைக்க மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெரும் துணையாக இருந்தார்.

1969-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா மறைவுக்கு பிறகு முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி இந்த மேம்பாலத்தை கட்ட உத்தரவிட்டார். 21 மாதத்தில் இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டது. 1973-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதி அழகிய தோற்றத்துடன் திறக்கப்பட்டது.

இந்த மேம்பாலத்திற்கு தன் குருவான பேரறிஞர் அண்ணாவின் பெயரை சூட்டி மகிழ்ந்தார், கருணாநிதி. இன்றைக்கு 49-வது ஆண்டை நிறைவு செய்து, 50-வது தொடக்க நாளில் பயணிக்கும் அண்ணாசாலை சென்னை நகரவாசிகளுடன் வாழ்வியலில் ஒரு அங்கமாக விளங்குகிறது.

திரைப்படங்களில் சென்னை அண்ணாசாலையை தவிர்த்து காட்சிகளை அமைக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு, சினிமாவிலும் தனது ஆதிக்கத்தை அண்ணா மேம்பாலம் செலுத்தியது.

சென்னையின் வாகன பெருக்கத்திற்கு ஆரம்ப காலகட்டத்தில் கைமேல் பலன் கொடுத்த மேம்பாலம். போக்குவரத்து நெரிசல் இல்லாத நேரங்களில் அண்ணாசாலை மேம்பாலத்தில் காரிலோ, இரு சக்கர வாகனத்திலோ பயணிப்பது என்பது மகிழ்வின் உச்சம்தான்.

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்த மேம்பாலம் தனது 50-வது ஆண்டு தொடக்க பயணத்தை மேற்கொள்ளும் நேரத்தில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா மேம்பாலத்தை அழகுபடுத்தும் பணியை தொடங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி மேம்பால சந்திப்பில் கதீட்ரல் ரோடு செல்லும் பகுதியில் பல்லவர் கால பாணியில் செதுக்கப்பட்ட 6 அடி உயர சிங்கம் சிலை அழகிய வடிவமைப்புடன் நிறுவ உத்தேசிக்கப்பட்டு உள்ளது. மேம்பாலத்தின் ஒவ்வொரு நுழைவு பகுதி, வெளியேறும் பகுதி என 8 இடங்களில் அழகிய கல்தூண்கள் அமைக்கப்பட இருக்கிறது.

அண்ணா மேம்பாலத்தில் மொத்தம் 80 தூண்கள் இருக்கிறது. மேம்பாலத்தின் அருகே புல்தரைகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் அழகிய தமிழ் எழுத்துக்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரது பொன்மொழிகளும் தூண்களில் செதுக்கப்பட உள்ளது.


Next Story