எர்ணாவூர் மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலி


எர்ணாவூர் மேம்பாலத்தில்  தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி பள்ளி மாணவர் பலி
x

எர்ணாவூர் மேம்பாலத்தில் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை

தடுப்பு சுவரில் மோதியது

சென்னை மணலி முனுசாமி தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 41), டில்லிபாபு (14), பவன்குமார் (14), செல்வம் (16) ஆகிய 4 பேரும் நேற்று மாலை ஒரே மோட்டார் சைக்கிளில் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரையில் கடலில் குளித்து விட்டு மணலி விரைவு சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை செந்தில்குமார் ஓட்டினார். அவருக்கு பின்னால் 3 பேரும் அமர்ந்து இருந்தனர். எர்ணாவூர் மேம்பாலத்தின் மீது ஏறி இறங்கும்போது நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள், பாலத்தின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதியது.

மாணவர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சிறுவன் பவன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா். இதுபற்றி தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், படுகாயம் அடைந்த செந்தில்குமார், செல்வம், டில்லிபாபு ஆகிய 3 பேரையும் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் பலியான பவன்குமார் உடலை மீட்டு பிரேத ப‌ரிசோதனை‌க்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். விபத்து குறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான பவன்குமார் மணலி அரசு மேல் நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story