லாரி மோதி பள்ளி மாணவி பலி
திருவரங்குளம் அருகே லாரி மோதி பள்ளி மாணவி பலியானார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாணவி பலி
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே சத்திரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலு-காளியம்மாள். இவர்களது மகள் காயத்ரி (வயது 13). இவர், பூவரசகுடி அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் தனது தாயாருடன், காயத்ரி ஆடுகளை மேய்ச்சலுக்கு ெகாண்டு விடுவதற்கு சென்றுள்ளார். பின்னர் காயத்ரி மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையை மாணவி கடக்க முயன்ற போது புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி சென்ற டிப்பர் லாரி எதிர்பாராதவிதமாக காயத்ரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவி உடல் நசுங்கி பலியானார். லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
சாலை மறியல்
இதையறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் ஆகிேயார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதையடுத்து உறவினர்கள், பொதுமக்கள் தப்பியோடிய லாரி டிரைவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வல்லத்திராக்கோட்டை போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போக்குவரத்து பாதிப்பு
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடைேய போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் தங்கராசு என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதி பள்ளி மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.