தெங்கம்புதூர் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை3 பேர் கைது
தெங்கம்புதூர் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலகிருஷ்ணன்புதூர்:
தெங்கம்புதூர் அருகே ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர்
தெங்கம்புதூர் அருகே உள்ள சாஸ்தான் கோவில்விளையை சேர்ந்தவர் சரவணமுருகன் (வயது 61). இவர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சரவணமுருகன் தற்போது பாளையங்கோட்டை தியாகராஜநகர் பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் 30-ந்தேதி சரவணமுருகனின் தந்தை தாணு இறந்து விட்டார். இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில்விளையில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவணமுருகன் ஊருக்கு வந்திருந்தார். பின்னர் அவர் இங்குள்ள வீட்டில் இருந்தார்.
ரூ.1 லட்சம் கொள்ளை
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வீட்டின் பின்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் குளித்து விட்டு வீட்டுக்குள் வந்தபோது, அங்கு பையில் வைத்திருந்த ரூ.1 லட்சம், பர்சில் இருந்த ரூ.4,300, ஏ.டி.எம். கார்டு, பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுனர் உரிமம், 2 குத்துவிளக்குகள், 3 கிலோ ஒயர்கள் ஆகியவை மாயமாகி இருந்தது. சரவணமுருகன் குளிக்கச் சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.
இதுபற்றி சரவணமுருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
உருவம் சிக்கியது
மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது, 3 பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து சரவணமுருகனின் வீட்டிற்குள் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வந்தனர்.
3 பேர் கைது
அப்போது கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரும் பறக்கை அருகே நிற்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று 3 பேரையும் பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் நாகர்கோவில் அருகே உள்ள வெள்ளாடிச்சிவிளையை சேர்ந்த மாயாண்டி என்ற மன்னன் (21), ரஞ்சித்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், சரவண முருகன் வீட்டில் கொள்ளையடித்ததும் தெரிய வந்தது. 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கைது செய்தார். அப்போது அவர்களிடம் இருந்த ரொக்க பணம் ரூ.88 ஆயிரத்து 250 மற்றும் ஒரு குத்து விளக்கு, ஒயரும் பறிமுதல் செய்யப்பட்டது.
பின்னர், அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவன் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட உள்ளான்