திருச்சி-சிதம்பரம் நான்கு வழிச்சாலையில் அரியலூருக்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்


திருச்சி-சிதம்பரம் நான்கு வழிச்சாலையில் அரியலூருக்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும்
x

திருச்சி-சிதம்பரம் நான்கு வழிச்சாலையில் இருந்து அரியலூருக்கு செல்ல வழி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

நான்கு வழிச்சாலை

அரியலூர் மாவட்டத்தில் திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே உள்ள பொய்யூர் வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு, தற்போது போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த சாலையில் சுங்கச்சாவடி திறக்கப்பட்டு, அந்த வழியாக செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

திருச்சியில் இருந்து பொய்யூர் வரை 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையையொட்டி உள்ள சிறிய கிராமங்களுக்கு செல்லும் சாலையின் இடையே மேம்பாலம் கட்டப்பட்டு, அணுகு சாலையுடன் கிராமத்திற்கு செல்லும் வழி குறித்து அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

வழி ஏற்படுத்தப்படவில்லை

ஆனால் அரியலூரில் இருந்து திருச்சி செல்வதற்கும், திருச்சியில் இருந்து அரியலூருக்கு வருவதற்கும் புதிய நான்கு வழிச்சாலையில் அரியலூருக்கு செல்லும் வழியில் வழி ஏற்படுத்தப்படாமல், சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அரியலூரில் இருந்து கீழப்பழுவூர் செல்லும் சாலையில் உள்ள மேம்பாலத்தையொட்டி இருபுறமும் வரும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் இந்த சாலையில் கீழப்பழுவூருக்கு முன்பே பிரிவு சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் வந்து (கீழப்பழுவூர் மேம்பாலத்தில்) பின்னர் பெரம்பலூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் அரியலூருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதேபோல் அந்த வழியாக தஞ்சாவூர் செல்வதற்கும் பாதை வசதி செய்யப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு காலவிரையம் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது.

கோரிக்கை

புதிதாக அமைக்கப்பட்ட 4 வழிச்சாலையின் இடையே சிறு கிராமங்களுக்கும் செல்ல பாதைகள் அமைத்துள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாவட்டத்தின் தலைநகரான அரியலூருக்கும், சுற்றுலாத்தலங்கள் உள்ள மாவட்டமான தஞ்சாவூருக்கும் செல்வதற்கான சாலையில் வாகன ஓட்டிகள் சிரமமின்றி செல்வதற்கு தகுந்த வழியை ஏற்படுத்தவில்லை.

மேலும் சாலை பிரியும் இடத்திற்கு முன்பு ஊர் பெயர்கள் எழுதப்பட்ட பலகைகள் வைக்கப்படவில்லை. இதனால் திருச்சியில் இருந்து வருபவர்கள் பிரிவு சாலையில் இறங்காமல் நேராக சென்று விட்டால், வீணாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொய்யூர் வரை சென்று, மீண்டும் திரும்பி அரியலூர் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அரியலூருக்கும், தஞ்சாவூருக்கும் செல்வதற்கான வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளில் கோரிக்கை ஆகும்.


Next Story