பனையேறும் எந்திரம் கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் விருது
பனையேறும் எந்திரம் கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் விருது வழங்கப்படும் என்று தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது
விழுப்புரம்
பனையேறும் எந்திரம்
தமிழ்நாட்டின் மாநில மரமான பனை மரம் விவசாயிகளுக்கு பல வகைகளில் உதவிகரமாக உள்ளது. உதாரணமாக நிலத்தடி நீரை அதிகரித்தும், மண் அரிப்பை தடுத்தும், மண்ணை உறுதிப்படுத்தி, வளப்படுத்தி மண்ணிற்கு கந்தக மரமாக விளங்குவதோடு அடி முதல் நுனி வரை பயனளித்து மக்கள் பலரின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. பல குடும்பங்கள் பனை ஓலைகள், நார்கள் ஆகியவற்றின் மூலம் கூடை பின்னுதல், பாய் முடைதல், கயிறு திரித்தல் போன்ற தொழில்களை சார்ந்தும், நுங்கு அறுவடை, பதநீர் இறக்குதல் ஆகிய தொழில்களை சார்ந்தும் பனை மரங்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தோட்டக்கலைத்துறையில் பனை மேம்பாட்டு இயக்கம் (2022-2023) மூலம் பனை விதைகள் நூறு சதவீத மானியத்தில் ஒரு விவசாயிக்கு 50 எண்கள் வீதம் வழங்கப்படுகிறது.
இதில் விழுப்புரம் மாவட்டத்துக்கு 2022-2023-ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நூறு சதவீத மானியத்தில் 25 ஆயிரம் பனை விதைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனை ஏறும் எந்திரம் 75 சதவீத மானியத்தில் (அதிகபட்சமாக ரூ.4,500-க்கு) வழங்கப்பட உள்ளது. இதற்கு 5 எண்கள் இலக்காக பெறப்பட்டுள்ளது.
ரூ.1 லட்சம் விருது
இத்திட்டத்தின் சிறப்பம்சமாக சிறந்த பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் விருது வழங்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி பனை மரத்தில் எந்தவித ஆபத்துமின்றி இலகுவாக ஏறுவதற்காகவும், பனை நுங்கு மற்றும் பிற பொருட்களை திறம்பட அறுவடை செய்வதற்காகவும் கருவிகளை கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் முற்போக்கு மிக்க விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த பனையேறும் எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கான விருது வழங்கப்படும்.
பனையேறும் எந்திரம் கண்டுபிடிப்பதற்காகும் மொத்த செலவு, விலையின் உண்மைத்தன்மை, எந்திரத்தின் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த பயனளிக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் விருது வழங்கப்படும். இதற்கென அமைக்கப்பட உள்ள குழுவின் முன் செயல்விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் சிறந்த பனையேறும் எந்திரம் கண்டுபிடிப்பவர்கள், விருதிற்கு தோட்டக்கலைத்துறையின் https://www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவுசெய்து கொள்ளலாம்.
இந்த தகவலை தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.