ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 5-வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விமான நிலையத்துக்கு எதிர்ப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வளத்தூர், நெல்வாய், தண்டலம், மேல்படவூர், நாகப்பட்டு, ஏகனாபுரம், எடையார்பாக்கம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம், சிங்கிலி பாடி, மகாதேவி மங்கலம் உள்ளிட்ட 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4,791 ஏக்கர் பரப்பளவில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய-மாநில அரசுகள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
ஆனால் இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், பரந்தூர், தண்டலம், நெல்வாய், மேலேறி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் கிராம சபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்களை நிறைவேற்றி வருகின்றனர்.
5-வது முறையாக தீர்மானம்
அதன்படி ஏற்கனவே சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, நவம்பர் மாதம் உள்ளாட்சி தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு நடந்த கிராமசபை கூட்டங்களிலும் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 4 முறை தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்தநிலையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நேற்று ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய-மாநில அரசுகள் அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தும் ஒருமனதாக 5-வது முறையாக தீர்மானத்தை நிறைவேற்றி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
உலகத் தண்ணீர் தினத்தை கொண்டாடும் இந்த நாளில் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் அதிகம் உள்ள பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.