மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் சுற்றுலா பயணிகள் ஓய்வு எடுக்க நிழற்குடை அமைக்க கோரிக்கை
மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் பயணிகள் அமர்ந்து இளைப்பாறும் வகையில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடற்கரை கோவில்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் வடிவமைக்கப்பட்ட புராதன கற்கோவிலாகும். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக இந்த கோவில் திகழ்கிறது. கடற்கரையுடன் இயற்கை எழில் கொஞ்சும் தோற்றத்துடன் கூடிய இந்த கோவிலை கண்டுகளிக்க நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் மாமல்லபுரம் வந்து செல்கின்றனர்.
மேலும் இந்த கடற்கரை கோவில் வளாகம் பசுமை புல்வெளிகளுடன் கூடிய வசதியுடன் 10 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது.
நிழற்குடை
தற்போது பருவ மழைக்காலங்களில் சுற்றுலா வரும் பயணிகள் மழை பெய்யும் போது ஒதுங்கி நிற்க இங்கு போதுமான நிழற்குடை வசதி இல்லை. மழை பெய்யும் போது மழையில் நனைந்து கொண்டே 100 மீட்டர் தூரத்தில் உள்ள நுழைவு வாயில் பகுதி வழியாக நடந்து சென்று வெளியேற வேண்டிய நிலை உள்ளது.
மழைக்காலங்களில் குழந்தைகளுடன் வரும் பயணிகள் இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அதேபோல் ஏப்ரல், மே, ஜுன், ஜுலை மாதங்களில் கொளுத்தும் வெயிலில் கடற்கரை கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு சுற்றி் பார்த்தவுடன் அமர்ந்து ஓய்வு எடுக்கும் வகையில் நிழற்குடை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாக பரிதவித்து வருகின்றனர். அப்போது நிழல் கொடுக்கும் குடைகள் போல் தலையில் துணிகளையும், சுடிதார் துப்பட்டாவை போர்த்திக்கொண்டு பல பயணிகள் வெயிலின் கோரப்பிடியில் இருந்து தப்பித்து சுற்றி பார்த்துவிட்டு, பிறகு சாலைப்பகுதிக்கு வந்து அங்குள்ள மரத்தடி நிழலில் ஓய்வு எடுக்கும் நிலை உள்ளதையும் காண முடிகிறது.
கோரிக்கை
சுற்றுலா பயணிகளை போல் கடற்கரை கோவில் வளாகத்தில் இரவு, பகல் நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலாளிகள் மழை, வெயில் காலங்களில் ஒதுங்க இடம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.
எனவே மத்திய தொல்லியல் துறை நிர்வாகம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள், காவலாளிகள் வசதிக்கேற்ப கடற்கரை கோவில் வளாகத்தில் உள்ள புல்வெளி மைதானத்தின் ஒரு பகுதியில் நிழற்குடை வசதி செய்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.