வட்டார அளவிலான கலை திருவிழா
தாந்தோணிமலை வட்டார அளவிலான கலை திருவிழா தொடங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் மாணவர்களின் பல்வேறு கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் விதமாக அரசு பள்ளிகளில் கலை திருவிழாவை வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக தாந்தோணிமலை வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் கவுண்டம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. போட்டியை கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் கவின்கலை, நாடகம், நடனம், நுண்கலை, மொழிதிறன், இசை கருவி வாசித்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 32 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இதில் முதல் இடம் பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இப்போட்டி வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது.