கீழ்வேளூரில், ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்
ஒரு நாளைக்கு 15 முறைக்குமேல் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதால் கீழ்வேளூரில், ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிக்கல்:
ஒரு நாளைக்கு 15 முறைக்குமேல் ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதால் கீழ்வேளூரில், ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில்வே கேட்
நாகை மாவட்டம் கீழ்வேளூர்- கச்சனம் நெடுஞ்சாலையில் கீழ்வேளூர் ெரயில் நிலையம் அருகே ெரயில்வே கேட் உள்ளது. இந்த ெரயில்வே கேட்டை கடந்து திருத்துறைப்பூண்டி, திருக்குவளை, எட்டுக்குடி, கீழையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.
60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் தினமும், மோட்டார் சைக்கிள், நான்கு மற்றும் கனரக வாகனங்களில் இந்த ரெயில்வே கேட் வழியாக சென்று வருகின்றனர்.
15 முறைக்கு மேல் மூடப்படுகிறது
இந்த ரெயில்ேவ கேட் வழியாக தினமும் பயணிகள், விரைவு ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த ெரயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. ஒரு நாளைக்கு 15 முறைக்கு மேல் ரெயில்வே கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன.
அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி வாகனங்கள், தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ், கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காத்துக்கிடப்பதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
மாணவ-மாணவிகள் அவதி
ரெயில்வே கேட் மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயில்வே கேட் திறந்த பிறகு வாகனங்கள் முண்டி அடித்து செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
கீழ்வேளூர் அருகே ரெயில்வே கேட்டின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தீர்மானம் நிறைவேற்றம்
கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் கீழ்வேளூர் ெரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சம்பந்தப்பட்ட ெரயில்வே நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை ரெயில்வே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வமணி கூறுகையில், நாகை-திருவாரூர் இடையே ெரயில் தண்டவாளத்தில் கீழ்வேளூர் ெரயில் நிலையத்தில் மட்டும் கிராசிங் ஸ்டேசன் உள்ளது.
ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்
இந்த வழித்தடத்தில் பயணிகள் மற்றும் விரைவு ெரயில்கள், சரக்கு ெரயில்கள் சென்று வருவதால் ஒரு நாளைக்கு 15-க்கும் மேற்பட்ட முறை ெரயில்வே கேட் மூடப்படுகிறது. அப்போது சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர கால வாகனங்களும் காத்துக்கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழ்வேளூர் ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கீழ்வேளூர் அருகே பட்டமங்கலம் கண்ணன் கூறுகையில், கீழ்வேளூர் - கச்சனம் சாலையில் அமைந்துள்ள ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். ரெயில்வே கேட்டை திறந்தவுடன் வாகனங்கள் போட்டி, போட்டு செல்வதால் தடுமாறி கீழே விழுந்து வாகன ஓட்டிகள் காயம் அடைக்கின்றனர். ரெயில்வே நிர்வாகம், கீழ்வேளூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.